வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.
வேலனிடமும் செல்லாச்சியிடமும், வீட்டையும், இலக்சுமியையும், வைரவனையும், விட்டிட்டு, என்னிடமிருந்து கலங்கியபடியே பிரிந்து, பிள்ளைகள் இருவருடனும் சென்ற, ராசம் ஆறுமாதங்களுக்குப் பின், ஒரு நாள் மாலையில் திரும்பி வந்தாள். அவளுடன் சென்ற பிள்ளைகள் வரவில்லை.
தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த அவள் நடையில், களைப்பு மிகுந்திருந்தது. தலை கலைந்திருந்தது. அவள் பின்னால், கைபிடிகளில் பைகளும், பின்னால் பூட்டியிருந்த கரியலில் தலைகணியும் கட்டியிருந்த சைக்கிளை தள்ளியபடியே வீரையா வந்தான்.
முற்றத்துக்கு வந்தவள் நின்று நிமிர்ந்து வீட்டைப்பார்த்தாள். வெறிச்சோடிக் கிடந்தது. முற்றத்தில் அங்கங்கே பழுத்த இலைகளும் சருகுகளும் விழுந்து கிடந்தன. ஆள் நடமாட்டத்தைக் காணவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவள் வருவதை மோப்பம் பிடித்து, வாலை ஆட்டிபடியே ஓடிவரும் வைரவனையும் காணவில்லை. அநத் வெறுமை ராசத்தை அச்சுறுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே இருந்த களைப்பினை மேலும் கூட்டியிருக்க வேண்டும். அப்படியே சோர்ந்து போய் என்னடியில் இருந்து கொண்டாள். என்மீது சாய்ந்த கொண்ட அவளின் கைகளில் ஒன்றை என்னைத் தடவியது. “ வேம்பி..!” எனும் தேம்பல் கண்ணீருடன் வெளிப்பட்டது.
மெல்லிய காற்றின் அசைப்பில் சலசலத்தேன். என்னிலிருந்து உதிர்ந்த இலையொன்று ராசத்தின் க்கனத்தில் வழிந்த கண்ணீரில் ஒட்டிக் கொண்டது.
வீரையா, சைக்கிளை ஓரமாக ஸ்ரான்ட் போட்டு நிறுத்திவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி, மேலைத் துடைத்துக் கொண்டு, வீட்டின் சூழலையும், ராசத்தையும், கவனித்தான். ராசம் கவலையில் நிரம்பிக்கிடந்தது புரிந்திருக்க வேண்டும். அவள் சற்று ஆசுவாசப்படட்டும் என எண்ணியவன் போல், காதில் செருகியிருந்த பீடியை எடுத்தவாறு வீதிப்பக்கமாக நகர்ந்தான்.
ராசத்தின் பிள்ளைகள் எங்கே ? என நீங்களும் நானும் யோசிப்பது போலவே, வேலனும் செல்லாச்சியும் எங்கே..? என ராசம் யோசித்திருக்க வேண்டும். கண்களால் வழிந்து கன்னத்தை அடைந்திருந்த கண்ணீரையும், ஒட்டியிருந்த வேப்பிலையையும், தடைத்தவாறு நிமிர்ந்தாள். பார்வையைச் சுழற்றுகையில் தான் கவனித்தாள், கல்யாண முருங்கும் , வேம்பிக்கும் இடையில் புதிதாக வாழை ஒன்று வளர்ந்திருக்கிறது. மரங்கள் மீது ராசத்திற்கு கொள்ளைப் பிரியம் என்றாலும், வீட்டிற்கு முன்னால் ‘வாழை’ வைக்கப்பிடிக்காது.
“வாழையடி வாழை” என வாழ்த்தினாலும், கொண்டாட்டங்களின் போது, வாழை, தோரணம் என வீட்டிற்கு முன்னால் கட்டினாலும், வீட்டிற்கு முன்னால வாழை வளர்ப்பதில்லை என்பது யாழ்ப்பாணப்பகுதிகளில், நெடுநாள் வழக்கம்
ராசத்தின் இளையவன் முகுந்தன், ஒரு சமயம் வீட்டிற்கு முன்னால், மணிவாழையை அழகுக்காக நடுவதற்கு ஆசைப்பட்டான். ஆனால் ராசம் வேண்டாம் என மறுத்தாள்.
“பிள்ளை ஆசைப்படுகுது. அது பூவாழைதானே ஆச்சி. வைக்கட்டுமன்..”
“வீட்டுக்கு முன்னால வாழை நட்டா, வீடு விறுத்தியாகாது..”
முகுந்தனுக்காக வாதாடிய வேலனுக்கு உறுதியாக மறுத்துச் சொல்லியிருந்தாள் ராசம். அதெல்லாம் தெரிந்தும் வீட்டிற்கு முன்னால் வாழை நட்டிருக்கிறார்களே...? என ராசம் சற்று வெறுப்போடு யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ஐயோ அம்மா..மா..!” என்ற அலறல், அந்த முற்றத்தில் வெடித்துச் சிதறியது. அலறியபடி ஒடி வந்த செல்லாச்சி, ராசத்தின் காலடியில் விழுந்து கதறினாள்.
அவளது தலையை தடவி நிமிர்த்த முயன்றாள் ராசம். ஆனால் ஆறுமாதகாலமாக அடக்கி வைத்திருந்த சோகங்களையெல்லாம் கண்ணீராகவும், கதலாகவும், ராசத்தின் காலடியில் கொட்டினாள். நிமிடங்கள் கழிந்தன. சோர்வாக இருந்த போதும், ராசம் தடவியபடியே இருந்தாள்.
செல்லாச்சியின் கவலையும் கதறலும் கேவலாக மாறிய போது, வருடலை நிறுத்தாமலே, ராசம் மெதுவாகக் கேட்டாள்.
“ வேலன் எங்க..?”
“ஐயோ.. என்ர ஐயோ…! …..”
கேவிக் கொண்டிருந்த செல்லாச்சி மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். இப்போது அவளது அழுகை ஒப்பாரியாக மாறியிருந்தது.
ராசத்தின் களைப்பையும் மீறி, பதற்றம் பற்றிக் கொண்டது.
“ என்னடி.. என்ன … வேலன் எங்க..?”
“ ஐயோ.. நான் என்னத்தச் சொல்லுவன்..” என்றவள், கைகளால் தலையிலும், மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்டாள் செல்லாச்சி.
அவளை நிதானப்படுத்த முயன்ற ராசத்தின் முயற்சிகள் தோற்றுப் போயின. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.
இவ்வளவு சத்தத்தின் பின்னும் வைரவனைக் காணேல்லையே என்ற கேள்வியும் மனதிற்குள் குறுகுறுத்தது. ஆனால் கேட்கவில்லை.
அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையில், செல்லாச்சியும் இல்லை. அழுகையோடு அவள் மயங்கிவிட்டது போல் நிலத்தில் முகங்குப்புற விழுந்து கிடந்தாள். அவளை நிமிர்த்தித் தூக்கும் திராணியற்று, அவளின் கைகளைப் பிடித்தாள். அவை குளிர்ந்து போயிருந்தன. தன்கைகளால் அவளது கைகளைத் தேய்த்துச் சூடேற்ற முனைந்த ராசம், அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அந்த நடுக்கம், அவள் அறியாத ஒரு பயங்கரத்தினை உணர்த்தியது.
என்ன..நடந்தது..? பேச்சு மூச்சின்றிக் கிடக்கும் செல்லாச்சி எழுந்து சொல்வாளா..? என்ற கேள்விகளோடிருந்த ராசம், அண்ணாந்து பார்த்து, “வேம்பி ..” என்றாள்.
எனக்குப் புரிந்தது. ராசம் என்னிடம் கேட்கிறாள்.
இப்போது அதை நான் சொல்ல வேண்டும்…..
இந்த முற்றத்தில் பேய்கள் ஆடிய பெருந்துயரத் தாண்டவத்தின் காட்சிகளை, சாட்சியாக நின்ற நான் சொல்ல வேண்ணடும்…..
---------------------------------------------------------
வீதிவரை சென்று விட்டு விட்டு வந்த செல்லாச்சிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
நான் மட்டுமில்லை, அவளும் ராசத்தைப் பிரிந்திருந்த நாட்களில்லை. பிறந்தது முதல் ராசத்தையும், ராசத்தின் முற்றத்தையும் ஒரு நாள், ஒருபொழுதும் மறந்திருந்தாள் இல்லை. அவள் உலகும், வாழ்வும், இந்த முற்றமும் ராசத்தின் குடும்பமும் தான். இது அவளில் தொடங்கியதல்ல. அது எப்போது தொடங்கியதென்பது அவளுக்கும் தெரியாது.
இந்தக் குடும்பத்தின் சிரிப்பும், அழுகையுமே, அவளது குடும்பத்தின் உணர்வுகளாகவுமிருந்த நிலையில்தான், அவளது வாழ்வில் வேலன் சேர்ந்தான்.
ஒருவகையில் அவளோடு வேலனைச் சேர்த்ததில், ராசத்தின் தாய் கமலத்துக்கும் பங்கிருந்தது. ராசத்தின் தகப்பன் சின்னத்தம்பி இறந்த பின்னால், அவர்களது தோட்டந்துரவுகளைப் பாரப்பதற்கு நம்பிக்கையான ஒரு ஆளின் தேவையிருந்த நேரத்தில், செல்லாச்சியோடு வேலனைச் சேர்ப்பதில் கமலம் கவனம் கொண்டிருந்தாள்.
அது நடந்த மறு வருடமே கமலமும் மறைந்து போக, ராசத்தின் கைகளுக்கு மாறிய பொறுப்புக்களுக்கு உதவியாகவும், நம்பிக்கைத் துணையாகவும் இருந்தார்கள் வேலனும் செல்லாச்சியும்.
வேலன் இரண்டு வருசத்துக்கு முன்னர், மரத்தில் இருந்து விழுந்து முறிந்து, வைத்தியசாலையில் கிடந்த போது, அவனையும் செல்லாச்சியையும் ஆதரவாகப் பார்த்துக் கொண்டது முதல், அவன் வீடு திரும்பிய பின்னும் நம்பிக்கையை அவர்கள் வாழ்வில் விதைத்தில் ராசத்தின் பொறுப்பும் நன்றியும், வெளிப்பட்டிருந்தது. அதனை விசுவாசமாக அந்தக் குடும்பத்திற்கு திருப்பிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள் வேலனும் செல்லாச்சியும்.
“என்னவாம் யோசித்துக் கொண்டிருக்கிறீர்…?” வேலனின் வார்த்தைகளில் எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். மற்றவர்களிடத்தில் எளிதில் காண முடியாத அதுவே அவளுக்கு அவனிடத்தில் ரொம்பப் பிடித்த விடயம்.
“ வேலனை கட்டிக்கிறியா ..?” என ராசத்தின் தாய் கமலம் கேட்ட போது அவள் மறுக்காமல் ஒத்துக் கொண்டதற்கு அதுதான் முக்கிய காரணம்.
“ செல்லாச்சி வேலனில சொக்கிப் போனாள்..” என ராசம் சொல்லிச் சிரித்திருக்கிறாள்.
“என்ன யோசனை…?” மௌனமாகவிருந்த செல்லாச்சியிடம் மீண்டும் கேட்டான் வேலன்.
“ இல்லை, அம்மா பாவம்… இப்ப எங்க நிக்கினமோ தெரியேல்ல. இந்த வீட்டில ராணிமாதிரி இருந்தவா….”
“ ஓமோம். .. “
“ என்ன செய்யிறது. பிள்ளையளோடதானே போனவா. அவை கவனமாப் பாப்பினம் தானே. நீர் கவலைப்படதேயும்...” அவளை ஆமோதித்துத்துப் பதில் சொன்னான் வேலன்.
வேலன் சக்கரநாற்காலியிலிருந்து திண்ணைக் குந்துக்கு நகர்ந்து உட்கார்ந்து, தூணில் சாய்ந்து கொண்டான். அது கொஞ்சம் வசதியாக இருந்தது. அந்தக் குந்தில் இருக்கும் அனுபவம் அவனுக்குப் புதியது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த செல்லாச்சியிடம் “ இப்படியே இருந்தா என்ன மாதிரி..? இருட்டப் போகுது. “ என்றான்.
மாலையின் மங்கலை இருள் ஆக்கிரமித்துத் தன்னுள் மறைக்கத் தொடங்கியிருந்தது. வீதியில் இப்போதும் சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. ஆனால் குறைந்திருந்தது போலவும் தெரிந்தது. பறவைகள் வழமைபோல் மரங்களுக்குள் கீச்சிட்டு மறைந்தன. அம்மன் கோயில் மணி அடித்தது.
அப்போதுதான் அவளுக்கான பொறுப்பு நினைவுக்கு வந்தவளாய், “அம்மா விளக்கு வைக்கச் சொன்னவா….” என்று சொல்லித் தயங்கினாள்.
“சொன்னபடியா வைக்கத்தானே வேணும்..”
“..யோசிச்சுக் கொண்டு நிக்காமல், போய் கால் முகத்த கழுவிற்று வந்து விளக்க ஏத்தும்…” அமைதியாக நின்ற அவளை அவனே உசார்படுத்தினான்.
“ பெரிய வீட்டுக்க போய் ஏத்தலாமோ..?” சந்தேகமாகக் கேட்டாள்.
“ அப்பிடிச் சொல்லித்தானே அம்மா திறப்பத் தந்தவ..” அவன் நியாயம் சொன்னான்.
“ உமக்குத் தெரியும்தானே. முந்தி எங்கட ஆக்கள கிணத்தில தண்ணி அள்ளவும் விடிறதில்லை. ஆனா இப்ப அப்பிடி இல்லைத்தானே... அதுபோலத்தான் இதுவும்…” தன் நியாயத்தை மேலும் வலுப்படுத்தினான் வேலன்.
அம்மன் கோவில் மணி இரண்டாவது தடவையும் ஒலித்தது.
“அம்மாளாச்சிக்குப் பூசை நடக்கப் போகுது. நீர் கெதியா விளக்க வையும்..” வேலன் மறுபடியும் அவளைத் துரிதப்படுத்தினான். அவன் சொன்னவற்றை மனதில் நினைவுபடுத்திக் கொண்டே, கிணற்றடிக்குப் போகத் தயரானாள் செல்லாச்சி. அவன் சொல்லது உண்மைதான். செல்லாச்சியின் தாய் படுக்கையில் கிடந்த இறுதிக் காலங்களில், கதைகதையாக அவற்றைச் சொல்லி வருந்தியிருக்கிறாள்.
வீதியில் ஆளரவங்கள் அதிகமாகக் கேட்டது. கினற்றடிக்குச் செல்ல எத்தணித்த செல்லாச்சி திரும்பி வந்தாள்.
வேலனும் சாய்ந்திருந்த நிலையிலிருந்து நிமிர்ந்து இருந்து கொண்டு வாசலை நோக்கினான்.
பலர் நடந்து வரும் சத்தம் பலமாகக் கேட்டது
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
- தொடரும்