free website hit counter

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் களம் ‘ஜெனீவா அரங்கினை’ ஒவ்வொரு வருடமும் திறக்கும். அந்த அரங்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது பல்வேறு அரங்காற்றுகைகளோடு நிறைந்திருக்கும். தொடர்ச்சியாக பலிவாங்கப்படும் ஒரு சமூகமாக தமிழ் மக்கள் நீதிக் கோரிக்கைகளோடு சர்வதேசத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும், ஈழத் தமிழர்களின் விவகாரம் மற்றும் சர்வதேச ஊடாடல் என்பது பெரும்பாலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் சுருக்கப்பட்ட நிலையில், ஜெனீவா அரங்கு மேலெழுவது இயல்பானதுதான். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றை கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது.