இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவை யாப்பு வரையறைகளுக்கு அமைவாக நடத்துவதற்கு இணங்குவதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
யாப்பு மீறல்களோடு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவை இரத்து செய்யவும், தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரியும் திருகோணமலை நீதிமன்றத்தில், தமிழரசுக் கட்சி உறுப்பினரான சந்திரசேகரம் பரா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளே, நீதிமன்றத்தில் கட்சித் தெரிவுகள் யாப்பினை மீறி இடம்பெற்றிருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, யாப்பு ஒழுங்குக்கு அமைவாக மீண்டும் தெரிவுகளை நடத்துவதற்கும் இணங்கியிருக்கிறார்கள். இதனை அடுத்து வழக்கு, இன்னொரு பிரதிவாதியான எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களை அறிந்து, வழக்கின் போக்கினை தீர்மானிப்பதற்காக ஏப்ரல் 05ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.அதுபோல, தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுதல் மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கும், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் போக்கினை அறிந்து முடிவெடுப்பதற்காக ஏப்ரல் இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்கள், கட்சிக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்று கட்சியின் புதிய தலைவராக தெரிவாகி, இப்போது தெரிவு பிழையென ஏற்றுக் கொண்டிருக்கும் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார்கள். அத்தோடு, எந்தவொரு தருணத்திலும் வழக்குத் தொடர்ந்தவர்களுடன் எந்த இணக்கப்பாடுகளுக்கும் செல்லமாட்டோம். நீதிமன்றத்தில் வழக்கினை உடைத்து வெற்றிபெறுவோம் என்றும் வாய்சவடால்களை அடித்திருந்தார்கள். ஆனால், அவையெல்லாம் ஊடக உளறல்களாக மட்டுமே முடிந்திருக்கின்றன. ஆனால், யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து இப்போது நீதிமன்றத்தின் முன்னால் சரணடைந்திருக்கிறார்கள். இந்தச் சரணடைவு, என்பது ஒப்பீட்டளவில் காலம் கடந்ததுதான். ஆனாலும் இதனை ஏற்பதைத் தவிர தமிழரசுக் கட்சிக்கு முன்னால் எந்தத் தெரிவுகளும் இல்லை என்பதே உண்மை.
தற்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரைத் தவிர முக்கியஸ்தர்களாக இருக்கும் அனைவரும் ஆயுதப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னராகவும் அரசியலுக்குள் வந்தவர்கள். இவர்களிடத்தில் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தீர்மானங்களின் குணங்குறிகள் அதிகமாகவே ஆளுமை செலுத்துகின்றது. அதாவது, தாங்கள் எடுப்பதுதான் முடிவு, அதனை ஏற்றுக்கொண்டால் இருங்கள்; இல்லையென்றால் விலகிவிடுங்கள் அல்லது விலக்கப்படுவீர்கள் என்பதுதான் அது. ஆனால், தற்போதுள்ள ஜனநாயக அரசியல் களத்தில் இந்த ஆயுத இயக்க வழிமுறை பெரிதாக உதவாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழரசுக் கட்சித் தலைவராகவும் சம்பந்தன், கடந்த பொதுத் தேர்தல் வரையில் ஆயுத இயக்கத் தலைவர் ஒருவர் கொண்டிருக்கும் அதிகாரத்தை ஒத்த அதிகாரங்களோடுதான் வலம் வந்தார். கடந்த தேர்தலுக்குப் பின்னர், அவரின் பிடி வெகுவாக தளர்ந்தது. அதற்கு அவரது வயது மூப்பும் உடல் தளர்வும் பெரிய காரணங்களாகின. மாவை எப்போதுமே முடிவுகளை எடுக்கும் தலைவராக இருந்ததில்லை என்பதால், அவர் பெரிய தலைமைத்துவ தாக்கங்களைச் செலுத்தவில்லை. மாறாக, கட்சியை குழப்பங்களுக்குள் தள்ளும் வேலைகளையே ஆரம்பத்தில் இருந்து செய்து வந்திருக்கிறார்.
ஆயுத போராட்ட இயக்கங்களின் ஆளுமையோடு அல்லது அதனை ஒட்டிய ஒழுங்கோடு அரசியலுக்குள் வந்தவர்கள், தங்களையும் அப்படியாக நினைக்க தலைப்பட்டதன் விளைவுதான், நீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சியை சரணடைய வைப்பதற்கும் காரணமாகியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, கட்சியின் வட்டாரக்கிளை தொடங்கி தொகுகிக்கிளை, மாவட்டக்கிளை தெரிவுகள் வரையில் கட்சியின் யாப்பு முறைமை பின்பற்றப்படவில்லை என்று பல தடவைகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதுபோல, பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 166ஐ தாண்ட முடியாது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அதனை கட்சித் தலைவர் மாவையோ, தலைவர் தெரிவுக்கு போட்டியிட்ட சிறீதரனோ, சுமந்திரனோ, சீ.யோகேஸ்வரனோ கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, எப்படியாவது தலைவர் தெரிவை நடத்தி கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணப்பாடே அவர்களிடம் இருந்தது. கட்சித் தலைவர் ஆகிவிட்டால், கட்சி ஒட்டுமொத்தமாக தன்னுடைய கட்டுக்குள் வந்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை ஆயுத இயக்க ஒழுங்கின் போக்கில் வருவது. ஆனால், தமிழரசுக் கட்சியோ யாரும் சர்வாதிகார ஆளுமை செலுத்தும் வகையான ஏற்பாடுகளை யாப்பில் கொண்டிருக்கவில்லை. ஜனநாயக கட்டங்களை வலுப்படுத்தும் வரையறைக் கொண்டது. அதனை யாரும் தலைக்குள் எடுக்காததன் விளைவாக, தலைவர் தெரிவில் போட்டியிட்டவர்களும், அவர்களுக்காக இயங்கியவர்களும் தாங்கள் நினைத்ததையெல்லாம் (கட்சிக்குள்) செய்துவிடலாம் என்று நம்பினார்கள்.
சிறீதரன் தலைவராக தெரிவானதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரனையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சிக்குள் இருந்து அகற்ற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்களே கூட்டங்களைக் கூட்டிப் பேசினார்கள். குறிப்பாக, சிறீதரனை வரவேற்று மன்னாரில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட சிறீதரன் ஆதரவாளர்கள் சுமந்திரனை கடுமையாக விமர்சித்தார்கள். அத்தோடு, அவர்களை அகற்ற வேண்டும் என்ற தொனியிலும் பேசினார்கள். ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் அதற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்ததும், அதனைக் கைவிட்டு அமைதியானார்கள். அதே அரியநேத்திரன் தான், கட்சியின் யாப்பை மீறிய செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதும், சர்வதேச விசாரணை கோரும் தமிழரசுக் கட்சியை உள்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தியிருக்கிறார்கள் என்று கட்டுரை எழுதியிருக்கிறார். அத்தோடு, தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக யாப்பு மீறல்களை செய்திருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார். அப்படியான நிலையில், தற்போது யாப்பு மீறல்களுக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களை அவர் துரோகிகள் எனும் தோரணையில் விளிக்கிறார். மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரே, எந்தவித அடிப்படைத் தெளிவும் அற்று, பதவிகளை மாத்திரம் இலக்கு வைத்து ஆடப்படும் ஆட்டத்தில் அம்பாக நின்று முறிகிறார். புதிய மத்திய செயற்குழு தெரிவு, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் குழப்பங்கள் விளைவிக்கப்படாமல் இருந்திருந்தால், சிலவேளை கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று, அந்தத் தீர்மானங்கள் தேர்தல் திணைக்களத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இன்று நீதிமன்றங்களின் முன்னால் சரணடைய வேண்டியும் ஏற்பட்டிருக்காது.
தங்களின் தீர்மானங்களை ஆதரிக்காதவர்களை விரட்டும் மனநிலையைக் கடந்து நின்று இயங்க வேண்டிய தேவை ஜனநாயக விழுமியங்களைப் பேணும் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு வேண்டும். அதற்குத் தயாராக இல்லாதவர்கள் தனித்தனிக் கட்சிகளை தாங்களே ஆரம்பித்து நடத்த வேண்டும். அவை, குடும்பக் கட்சிகளாக நீடிக்கலாம். தமிழரசுக் கட்சிக்குள் வரும் யாராக இருந்தாலும் அந்தக் கட்சியின் அடிப்படை யாப்பினையும் ஒழுங்கினையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான், கட்சியை நீதிமன்றங்களுக்குள் கொண்டு சென்று முடக்குவீர்கள். தற்போதுதான், தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு கட்சியின் யாப்பு என்ன சொல்கின்றது, அதனை மீறினால் என்ன சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, நீதிமன்றத்திடம் யாப்பு ஒழுங்குக்கு அமைவாக இயங்க ஒப்புக் கொண்டாகிவிட்டது. ஆனால், இனித்தான், அடுத்த அடுத்த கட்டங்களில் சிக்கல்கள் தடைக் கற்களாக வரப்போகின்றன. ஏனெனில், வட்டாரக் கிளை தொடங்கி மாவட்டக் கிளை வரையில் தனக்குச் சார்பானோருக்கே பதவிகளை வழங்கும் போக்கு மாவை உள்ளிட்ட முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட விரோதங்களினால் பலரும் அதிகார வரம்புக்கு அப்பால் சென்று விலக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், அவர்கள் யாரும் நீதிமன்றத்தை நாடினால், தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பல ஆண்டுகள் இழுபடும். அத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சித் தெரிவுகள் எவையும் நடைபெற்றிருக்காத நிலையில், கட்சியை சவாலுக்கு உட்படுத்தி தென் இலங்கை இனவாதிகள் யாராவது நீதிமன்றத்தை நாடினால், தமிழரசுக் கட்சி என்கிற தமிழ் மக்களின் முதன்மைக் கட்சி ஒட்டுமொத்தமாக முடங்கும் அச்சுறுத்தலும் முன்நின்று ஆடுகின்றது.
ஏற்கனவே, தமிழரசுக் கட்சி பிரிவினையை ஊக்குவிக்கின்றது என்று சுட்டிக்காட்டி கட்சியைத் தடை செய்யக் கோரி வழக்கொன்று தென் இலங்கை இனவாதிகளினால் தொடுக்கப்பட்டு, மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கின்றது. சமஷ்டி என்பது பிரிவினைக் கோரிக்கையல்ல என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், கட்சி தப்பித்தது. எப்போதுமே தென் இலங்கை நீதிக்கட்டமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும் என்று கொள்ள முடியாது. அது, அதிக தருணங்களின் அதிகார - இனவாதத் தரப்புக்களின் இழுப்புக்கு இழுபடும் ஒன்றாகவே இருந்திருக்கின்றது. அப்படியான நிலையில், அரசியல் விடுதலைப் போராட்டத்தினை பெரும் அடக்குமுறைகளுக்குள்ளும் சட்ட கட்டுப்பாடுகளுக்குள்ளும் நின்று முன்னெடுக்கும் தமிழ்த் தரப்பு தன்னுடைய நிலையைப் பாதுகாப்பதில் அதிக அக்கறையோடு இருக்க வேண்டும். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் இலக்கைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கட்சியை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, இருக்கும் வரையில் பதவி பகட்டை அனுபவித்துவிட்டு செல்லோம் என்பதற்காக தகிடுதித்தங்களையும் முறையற்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இன்றைக்கு தமிழரசுக் கட்சி எதிர்கொண்டு நிற்கும் முடக்க நிலை, கட்சியின் பெருந்தலைவர், தலைவர் தொடங்கி முக்கியஸ்தர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். ஏனெனில், அவர்களுக்கு கட்சியைப் பற்றிய அக்கறையைக் காட்டிலும் தங்களின் பதவிகள், அவற்றின் மூலம் எவ்வாறான தனிப்பட்ட ஆதாயங்களை அடையலாம் என்பதெல்லாம் முதன்மைக் காரணிகளாக இருந்திருக்கின்றன. அதனால்தான், வெளிச் சக்திகளும், பணமுதலைகளும் கட்சியை கைப்பற்ற முயல்கின்றன.
"...நான் கட்சிக்காக பல இலட்சம் ரூபாய்களைச் செலவளித்திருக்கிறேன். அதற்கான பிரதிபலனைக் கட்சி செய்ய வேண்டும். அதனால்தான், மத்திய செயற்குழு தெரிவு பொதுக்குழு வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும் குழப்பம் விளைவித்தோம். நாங்கள் தொடர்ந்து செலவளிக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்தப் பதவியும் தரமாட்டார்கள் என்றால் எப்படி..." என்று மாவையினால் பொதுக்குழு உறுப்பினராக முறையற்ற ரீதியில் உள்வாங்கப்பட்ட நபர் ஒருவர், அண்மையில் பலர் முன்னிலையில் கூறியிருக்கின்றார்.
இதுமாதிரியாகவே, கட்சித் தலைவர் தெரிவின் போதும், வேட்பாளராக போட்டியிட்டவர்களில் ஒரு சிலர் மற்றவர்களின் ஆதவரைக் கோருவதற்காக பதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியளிப்புத்தான், மத்திய செயற்குழு தெரிவுகள் பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும் குழப்பங்கள் ஏற்படக் காரணமாகின. கட்சியை தனிப்பட்ட சொத்தாக கருதியதன் விளைவாகவே இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை, கட்சியின் அடிப்படை ஜனநாயக மரபுக்கே எதிரானது. இனியாவது, தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாலான ஒழுங்கின் நின்று இயங்குவதற்கு தமிழரசுக் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றங்களில் ஒவ்வொரு நாளும் அல்லாட வேண்டி வரும். அது, அந்தக் கட்சியினருக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஏனெனில், தமிழ்த் தேசியப் பரப்பில் வடக்குக் கிழக்கு பூராவும் பரந்துபட்டு ஆளுமை செலுத்தும் வேறு எந்தக் கட்சியும் தமிழ் மக்களிடம் இல்லை.
நீதிமன்றத்தில் சரணடைந்த தமிழரசு! (புருஜோத்தமன் தங்கமயில்)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode