தேர்தல் ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. 2024 பிறப்பை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இலங்கை, இந்தியா, அமெரிக்கா என்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. தேர்தலுக்கான அறிவிப்புக்கள் புதிய தலைமைகளை,கூட்டணிகளை மக்களிடம் அறிமுகம் செய்யும். ஏற்கனவே பல தடவைகள் ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டிருந்தாலும் புதிதாக வரும் ஆட்சியாளர்கள் தங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் சிறிதாக நம்பிக்கை கொள்வார்கள். தேர்தலுக்கு அப்படியொரு அசாத்திய வல்லமை உண்டு. இலங்கை மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்ற இரு தேர்தல்களைச் சந்திக்கப் போகிறார்கள்.
தேர்தல்களுக்கு புதிய நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் ஆற்றல் உண்டு. எனினும் இலங்கையைப் பொறுத்தளவில் இம்முறை தேர்தல்கள் மக்களிடம் எந்தவித நம்பிக்கையையும் விதைக்கும் சாத்தியப்பாடுகளைக் காண்பிக்கவில்லை. புதிய ஆண்டு பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பை மக்களிடம் திணித்துக் கொண்டு பிறந்திருக்கின்றது. அது, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடங்கி, அனைத்து பக்கங்களிலும் நெருக்கடியை திறந்து விட்டிருக்கின்றது. தேர்தல்களில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பெரிதாக மீட்சியில்லை என்ற உணர்நிலை மக்களிடம் உண்டு. ஆனால், அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறுவதில்லை. அவர்களின் ஒற்றை இலக்கு எப்படியாவது அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும். அதற்காக என்னமாதியான வேடத்தைத் தரித்துக் கொண்டு அரங்காற்றுகைக்கு தயாராக இருப்பார்கள்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்த ராஜபக்ஷ எதிர் 'இன்னொரு தரப்பு' என்ற கட்டத்தை நாடு இன்னமும் தாண்டவில்லை. வரப்போகும் தேர்தல்களும் ராஜபக்ஷக்களை ஆதரிக்கும் தரப்புக்கும் எதிரான தரப்புக்கும் எதிரான மோதலாகவே இருக்கும். வழக்கமாக ராஜபக்ஷக்கள் தரப்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் யாராவது அதிகாரத்துக்காக போட்டியிடுவார்கள். ஆனால், இம்முறை அந்த இடத்தில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பதிலாக அவர்களின் சார்பில் ரணில் விக்ரமசிங்க இருக்கப் போகிறார். ஆக, ராஜபக்ஷக்களின் ரணில் எதிர் சஜித் பிரேமதாச என்ற நிலையே ஜனாதிபதித் தேர்தல் பிரதிபலிக்கப் போகின்றது.
2005 ஜனாதிபதித் தேர்தலில் புறக்கணிப்பு கோசத்தை முன்வைத்து தமிழ் மக்கள் ராஜபக்ஷக்களின் வெற்றிக்கு பெருவாரியாக உதவினார்கள். அதற்காக தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகமானது. முள்ளிவாய்க்கால் கரையின் கொடூர முடிவு வரை கொண்டு சென்றது. அதற்குப் பின்னரான காலத்தில், தென் இலங்கை மக்கள் ராஜபக்ஷ ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அதிகமான தருணங்களில் நின்றிருக்கிறார்கள். 2015 ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், 2022 அரகலய (போராட்டம்) என்ற மூன்று தருணங்களைத் தாண்டி ராஜபக்ஷக்களுடனேயே தென் இலங்கை மக்கள் நின்றிருக்கிறார்கள். ஆனால், 2005 ஜனாதிபதித் தேர்தலில் கையைச் சுட்டுக் கொண்டதன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் ராஜபக்ஷக்களுக்கு எதிரானது என்ற நிலையில் துருவப்பட்டது. இன்றைக்கும் ராஜபக்ஷக்களின் ஆதரவோடு தேர்தலில் யார் களம் கண்டாலும் அவர்களுக்கு எதிராகவோ தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அதனை இப்போதைக்கு மாற்ற முடியாது.
தமிழ்நாட்டு அரசியல் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆதரவு, எதிர் என்ற புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக அதிக காலம் ஆட்சியை தக்க வைத்திருக்கின்றது. ஆனாலும் திமுக ஆதரவு, எதிர் நிலை என்பதுதான் தமிழக அரசியல் களம். அதுபோலத்தான், ராஜபக்ஷக்களின் அரசியல் நீடிக்கும் வரையில், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எதிர்நிலை என்பது இயல்பானதாக இருக்கும். இந்த அடிப்படைப் புள்ளியை மறந்து நின்று யாராலும் அடுத்த கட்டங்களைச் சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரங்கில் அல்லாடிக் கொண்டிருக்கும் கட்சிகளும் தவிர்ந்த முடியாமல் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்ற கட்டத்தில் இருந்து வெளிப்படையாக மாற முடியாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ரணில் எதிர் சஜித் என்ற துருவப்பட்டு நின்கின்ற நிலையில், ரணிலின் நட்புப் பட்டியலில் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் அதன் முக்கியஸ்தர்களும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் கடந்த காலத்தில் ரணிலிடம் தனிப்பட்ட ரீதியில் ஆதாயங்களைப் பெற்றவர்கள் அதிகமுண்டு. பினாமிகளின் பெயர்களில் மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடங்கி, நிதி மூலங்கள் வரையில் ரணிலிடம் ஆதாயம் பெற்ற முதலைகள் தமிழ்த் தேசிய அரசியலில் உலவுகின்றன. அப்படியான தரப்பினருக்கு ரணிலின் வெற்றி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ரணில் ராஜபக்ஷக்களின் முகமாக தேர்தல் களத்தில் வரவிருக்கும் நிலையில், ரணிலுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க முடியாது. அப்படியான நிலையில், ரணிலை எப்படி காப்பாற்றுவது என்பதற்கான திட்டங்களை மெல்ல அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவை, தேர்தல் புறப்பணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற இரு விடயங்கள்.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக எழுந்தது. அது, ஒருபோதும் தென் இலங்கை அரசியல்வாதிகள் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டதில்லை. ஆனால், அரசியல் என்பது சந்தர்ப்பங்களை சமயோசிதமாக கையாளுதல் என்ற போக்கில் தென் இலங்கையின் அரசியலோடு சில தருணங்களில் சில இணக்கப்பாடுகளைக் கண்டிருக்கின்றது. அது எதிர்வரும் காலத்திலும் தொடரலாம். ஆனால், தமிழ் மக்களின் உணர்நிலை என்பது பெரும்பாலும் ஒரே புள்ளியில் திரளும் போது அதற்கு எதிரான களத்தை யார் திறந்தாலும் அவர்களின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் தேவை உண்டு. ஏனெனில், மக்களின் உணர்வுகளுக்கு எதிரான பக்கம் செல்லும் தரப்பினர், அதற்கான காரணத்தை மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களை தங்களின் பின்னால் அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால், அந்த முடிவு மக்கள் விரோதமானது. ஜனநாயக ரீதியாக யாருக்கும் எந்த அரசியல்நிலைப்பாட்டின் பக்கத்திலும் செல்லும் உரிமை உண்டு. ஆனால், மக்கள் நிராகரிக்கும் பக்கத்தில் நின்று கொண்டு அந்த மக்களின் அரசியலைப் பேசுவதாக காட்டிக் கொள்ள முடியாது.
2005 ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினால் நிகழ்ந்த விளைவுகளை அடுத்து, தமிழ்ச் சூழலில் யார் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை எடுத்து வந்தாலும் அவர்களை சந்தேகத்தோடுதான் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். புறக்கணிப்பு கோசத்தோடு வரும் தரப்பினர் ராஜபக்ஷக்களுக்காக வேலை செய்கிறார்கள் என்கிற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியும், ஒருகாலத்தில் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினை முன்வைப்பதில்லை. 2009 கோர முடிவுகளின் பங்காளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை 2010 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஆதரிப்பதற்கும் காரணமானது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களை வீழ்த்த முடியும் என்ற நிலையில், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தோடு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மோசமாக தோற்கடித்தார்கள். ஒரு கட்டம் வரையில், முன்னணியினர், ராஜபக்ஷக்களின் துணைக்குழுவினர் என்ற ரீதியில் தமிழ் மக்களில் ஒருபகுதியினர் நம்பினர்.
இம்முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக ராஜபக்ஷக்களுக்கு எதிரான அணியில் இருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறன. இந்த முடிவு, தமிழ் மக்களை தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதனால் எடுக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் இணைந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளராக அவர் மேற்கண்ட அறிவித்தலை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் விடுத்தார். தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன என்பது நிராகரிக்க முடியாத வாதம். ஆனால், அந்த வாதம், தமிழ் மக்களை கடந்த காலத்தில் மிகமோசமாக தோற்கடித்த தரப்பின் வெற்றிக்கு உதவும் என்று தெரிந்தால், அதனைத் தவிர்ப்பதுதான் சமயோசிதம். அதற்குப் பெயர்தான் அரசியல்.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை வழக்கமாக புலம்பெயர் தரப்புக்கள் சிலவும் எம்.கே.சிவாஜிலிங்கமும்தான் வழக்கமாக முன்கொண்டு வருவார்கள். ஆனால், இம்முறை அந்த விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்னொழிந்திருக்கிறார்கள் என்பது பல கேள்விகளை எழுப்ப வைக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் புளோட் இயக்கத்தினர் கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் நெருக்கமாக இயங்கிய தரப்பினர். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவு காலங்களில் கோட்டபாய ராஜபக்ஷவுடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் நெருக்கமாக இருந்தார். புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவை கொண்டாடுவதைக் காண முடியும். அப்படியான நிலையில், புளொட் ராஜபக்ஷக்களின் வெற்றிக்காக அல்லற்படுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் ஏன் அந்த முடிவின் பக்கத்தில் நின்கின்றன என்ற விடயத்தை மக்கள் ஆராயும் கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.
ரணிலின் வெற்றியை உறுதி செய்யும் ஆர்வத்தில் ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் இருக்கின்றனவா என்பது அந்தக் கேள்வி? ஏனெனில் அந்தக் கேள்வியின் பின்னால் வவுனியாவின் மக்களின் எதிர்ப்பை மீறி சீனித் தொழிற்சாலையை அமைக்கும் விடயத்தில் செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன் ஆகியோர் காட்டிய ஆர்வத்தை கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே, ரெலோ இயக்கத்துக்குள் இதற்காக செல்வமும் சுரேனும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், பலமுறை தமிழ் மக்களினால் நிராகரக்கப்பட்ட சீனித் தொழிற்சாலையை பொய் நிறுவனம், முகவரி, அலுவலகம் என்ற அடையாளங்களோடு செல்வமும், சுரேனும் யாருக்காக அமைக்க முயன்றார்கள் என்ற சந்தேகம் இருக்கின்றது. அதற்காக, ரணிலின் ஆசிர்வாதம் அவர்களுக்கு முழுமையாக இருந்தது. அப்படியானால், அதற்கான நன்றி விசுவாசத்தின் விளைவா தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது எழும் சந்தேகங்களில் ஒன்று. இப்படி நிறையை விடயங்களை வைத்து தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை பேசலாம். தேர்தல் வரும் போது இவ்வாறான நிறைய விடயங்கள் பேசப்படலாம்.
இன்னொரு பக்கம் கடந்த ஒரு வருடகாலமாக ரணிலோடு மிக நெருக்கமாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...' என்ற கட்டத்திற்கு வந்திருப்பதாக காட்டிக் கொள்கின்றார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ரணில் முழுமையாக அமுல்படுத்துவார். அதற்கான ஒத்துழைப்பை தமிழ்க் கட்சிகள் வழங்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் வரையில், விக்னேஸ்வரன் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அண்மையில் தமிழ்க் கட்சிகளுடன் ரணில் நடத்திய சந்திப்பை புறக்கணித்த விக்னேஸ்வரன், கடந்த காலத்தில் தனக்கு அளித்த வாக்குறுதிகளை ரணில் நிறைவேற்றவில்லை. அதனால், அவருடனான சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பை இரண்டு விதமாக நோக்கலாம். முதலாவது, அவர் இன்னமும் முன்பள்ளி பருவ அரசியல்வாதியாக இருக்கிறார் என்பது. இரண்டவாது, மிக முக்கியமானது, ரணிலையும் தன்னையும் அரசியலில் காப்பாற்றும் உத்தி.
ரணிலோடு அண்மையாக நாட்கள் வரையில் நெருக்கமாக இருந்த விக்னேஸ்வரன், திடீரென அவரில் நம்பிக்கை இல்லை என்று கூறுவதன் பின்னால் எழும் சந்தேகங்கள் முக்கியமானவை. ராஜபக்ஷக்கள் ஆதரவளித்தாலும் ரணில் வெற்றி என்பது கேள்விக்குரியது. தமிழ் மக்கள் வாக்களிப்பைத் தவிர்த்தால், ரணிலின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், ராஜபக்ஷக்களுக்கு (ரணிலுக்கு) எதிராக திரளும் தமிழ் வாக்குகள் ஒருபோதும் சஜித்துக்கு சென்று விடக் கூடாது என்ற நோக்கில், திசைதிருப்பல் நாடகத்தை விக்னேஸ்வரன் ஆரம்பித்திருக்கிறாரோ என்ற விடயம் மேலெழுகின்றது. அதிலும் குறிப்பாக, தமிழ்ப் பொது வேட்பாளராக தான் போட்டியிடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு காய்களை அடிக்க அவர் நினைக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்மொழிந்தாலும் அங்குள்ளவர்களில் யாரும் வேட்பாளர்களாக மாட்டார்கள். அப்படியான நிலையில், அந்த வேட்பாளர் நிலைக்கு தான் நகர்ந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலுக்கான கூட்டொன்றை அமைத்துக் கொள்ள முடியும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. அப்படி அமைந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம். தற்போதுள்ள நிலையில், விக்னேஸ்வரனுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது இல்லவே இல்லை. அவரின் பின்னால் உள்ளவர்களில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனைத் தவிர யாரும் வாக்குச் சேர்க்கும் வல்லமையுள்ளவர்கள் இல்லை. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அரங்கைத் திறந்து அதில், ஆதாயம் தேட அவர் முனைகிறார் என்று கருத வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தேர்தல்களை எதிர்காலத்தில் தங்கள் சந்திக்கப் போகும் பாரிய நெருக்கடிகளின் அளவை குறைக்கும் கருவியாகவே கொள்கிறார்கள். அதன்போக்கில்தான், அடுத்து வரும் தேர்தல்களையும் கொள்வார்கள். மற்றப்படி, தேர்தல் புறக்கணிப்பு கோசத்தின் பின்னாலோ, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு பின்னாலோ செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னால் மக்களின் உணர்நிலைகளுக்கு பின்னாலேயே தமிழ்த் தேசிய அரசியல் இயங்கியிருக்கின்றது. அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக அரசியல் கட்சிகளும் தலைமைகளுமே மக்களை வழிப்படுத்தும். ஆனால்,விடுதலைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் ஈழத் தமிழ்ச் சூழலில் அது மறுவளமாக நடைபெற்று வருகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல் ஆடப்படும் அரங்குகளை மக்கள் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை.
தேர்தல் ஆண்டும் தமிழர் அரசியலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode