free website hit counter

ரணிலை பாதுகாக்கும் இந்தியா! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பைப் பேணும் வகையில் பாலம் அமைக்கப்படுவது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்திருக்கிறார். ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய சில தினங்களுக்குள்ளேயே, மிலிந்த மொரகொட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவதைத் குறித்து பேசியுள்ளமை கவனம் பெறுகின்றது.

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பபை ஏற்படுத்துவது தொடர்பில் ஊடக வெளியில் பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதுபோல, யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன் விளைவாக, எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திற்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே, பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தும் நடைபெற்று வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலத்தொடர்பபை ஏற்படுத்துவது தொடர்பில் இந்தியாவோ, இலங்கையோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் அதிக கவனம் செலுத்தியிருக்கவில்லை. அதற்கு, இரு நாடுகளும் தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடக்குப் பகுதிக்குமான நிலத்தொடர்பு என்பது, இரு நாடுகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிற உணர்நிலை காரணமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் பெரு முதலாளிகள் தமிழ்நாட்டிலும் மன்னார் உள்ளிட்ட வடக்கு கிழக்கு இலங்கையிலும் பெரு முதலீடுகளைச் செய்திருக்கிறனர். அதனால், அவர்களின் தொழில் வளர்ச்சி தொடர்பில் இரு நாடுகளும் இப்போது அக்கறை கொள்கின்றன. நிலத்தொடர்பை ஏற்படுத்தி, பயணச் செலவு, நேரச் செலவு உள்ளிட்ட தொழிற்துறை உற்பத்திக்கான பாதக அம்சங்களை நீக்குவதற்கான நோக்கங்களை இரு நாடுகளும் கருத்தில் கொண்டிருக்கின்றன. அத்தோடு, கடலுக்கு அடியிலான கேபிள் இணைப்புக்கள், மின்சார பகிர்வு பற்றியெல்லாம் உரையாடல்கள் ஆரம்பித்திருக்கின்றன. அதனை, மிலிந்த மொரகொடவின் ஹிந்து செவ்வியில் புரிந்து கொள்ள முடியும்.

அதிக நேரங்களில் ஆட்சியாளர்கள் மக்களைக் காட்டிலும் பெருமுதலாளிகளுக்காகவே வேலை செய்திருக்கிறார்கள். இப்போதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலத்தொடர்பு – பாலம் அமைப்பது தொடர்பிலான உரையாடல் அதன் நோக்கிலேயே மேலெழுந்திருக்கின்றது. அதிலும், கொழும்பு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில், அதனைப் பிடித்துக் கொண்டு இந்தியா, தன்னுடைய ஆளுமையை தெளிவாக செலுத்துகின்றது. ஏற்கனவே, சீனாவிடம் கடன்பட்டு அல்லற்படும் இலங்கையை, கரையேற்றுவதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயன்று வருகின்றன. அண்மையில் கூட, இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான திரும்பப் பெறும் திகதிகளை மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் சீனா கைச்சாத்திட வேண்டும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்திய மாநிலங்கள், ஜீ.எஸ்.டி வரிப் பங்கீட்டினை மத்திய நிதி அமைச்சு ஒழுங்காக செய்வதில்லை என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல், இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பற்றி, நிர்மலா சீதாராமன் அக்கறை கொள்வது என்பது முக்கியமானது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், தன்னை இந்தியா புதுடில்லிக்கு அழைத்து அங்கீகரிக்க வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால், ஒரு வருடத்துக்குப் பின்னர் கடந்த மாதமே அவர் டில்லிக்கு அழைக்கப்பட்டார். மோடியுடனான சந்திப்பு நடந்தது. இந்த இடைப்பட்ட ஒருவருடம் என்பது, இந்தியா ரணிலை கண்காணித்து எடைபோடுவதற்கான காலமாக பார்க்கப்பட்டதாக கொள்ளலாம். அவர், சீனாவையும், ராஜபக்ஷக்களையும் எப்படிக் கையாள்கிறார். தங்களுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறாரா என்று இந்தியா கணக்குப் போட்டது. இப்போது, ரணில் மீது பெருமளவு திருப்தி கொண்டிருக்கின்ற இந்தியா, அவரை தொடர்ந்து இலங்கையின் ஆட்சித் தலைவராக பேணும் முடிவுகளோடு இருப்பதாக கருதலாம். ஏனெனில், ரணிலோடு முறுக்கிக் கொண்டு நிற்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியா சரியாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றது. ரணில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, தன்னுடைய பதவியை யாரும் கேள்விக்குள்ளாக்காத வகையில் உறுதிப்படுத்தும் நோக்கோடு இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை அவர் நடத்த நினைக்கிறார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால், ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைப்பது அவசியமானது. இன்று இருக்கும் நிலையில், ரணில் ராஜபக்ஷக்களின் பினாமி என்கிற உணர்நிலை நாட்டு மக்களிடம் உண்டு. அப்படியான நிலையில், தமிழ் மக்கள் ரணிலை ஆதரிப்பதற்கான வாய்பபுக்கள் குறைவு. அதனால், அதனை மாற்றி, தமிழ் மக்களின் வாக்குகளை ரணிலுக்கு மாற்றிவிடுவதில் இந்தியா கவனம் செலுத்துகின்றது. அதுவே, அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றிய பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமைக்கான காரணமாகும்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கிய 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி, அதனையே தமிழ் மக்களுக்கான தீர்வு என்று தீர்ப்பு எழுத இந்தியா 35 ஆண்டுகளாக முனைந்து வருகின்றது. தென் இலங்கையைப் பொறுத்தளவில் 13வது திருத்ததையே நாட்டை பிளக்கும் ஏற்பாடாக பார்க்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், காணி அதிகாரத்தை முழுமையாக வழங்கி 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று ரணில் அண்மையான நாட்களாக கூறி வருகின்றார். மாகாண சபைத் தேர்தலை நடத்தாது, 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாதம். மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாது, 13வது திருத்த அமுலாக்கம் என்பது எப்படி சாத்தியம் என்பது, தமிழ்க் கட்சிகளின் கேள்வி. மாகாண ஆளுநர்களிடம் அதிகாரங்களைப் பகிர முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி. அப்படியான சூழலில் மாகாண அதிகாரங்களைப் பகிர்ந்து, நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண அரசாங்கம் இயங்கியாக வேண்டும். அதற்கு, மாகாண சபைத் தேர்தல் அவசியம்.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசிய இந்தியத் தூதுவர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குமான அழுத்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரணிலுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியிருப்பதாக கூறியிருக்கின்றார். மோடிக்கும் ரணிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதை, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, இந்தியத் தூதுவர் விளக்கமளிக்க வேண்டிய தேவை என்பது, ரணிலின் ஆட்சி நீடிப்புக்கு தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கிலானது. அதனை உணர்ந்து கொண்டுதான், கடந்த திங்கட்கிழமை, அதாவது, இந்தியத் தூதுவருடனான சந்திப்புக்கு முதல் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில், 13வது திருத்த அமுலாக்கத்தை ஒரு படிநிலையாகவும், மாகாண சபைத் தேர்தல்களின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதோடு, தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இணைந்த வடக்கு கிழக்கைக் கொண்ட அதிகார பரவலாக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வீழ்ந்து போயிருக்கின்ற நாட்டின் பொருளாதாரம் மீள் எழுச்சி காண்பது என்பது அவசியமானது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால், ஒரு தரப்பு மக்களின் உரிமைகளும் உரித்துக்களும் அடகுவைக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் என்ற அடையாளம் என்பது ஏற்புடையது அல்ல. இப்போது, ரணிலை தக்க வைப்பதற்காக 13வது திருத்தம் என்ற குறைப்பிரசவத்தை தமிழ் மக்களின் தலையில் ஏற்றி வைக்க இந்தியா முயற்சிப்பது அறமற்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலத்தொடர்பை ஏற்படுத்தி, பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பத்தியாளருக்கு ஆதரவான கருத்து உண்டு. குறிப்பாக, நலிந்து போயிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களின் சிறுகுடிசைக் கைத்தொழில்களின் பெருஞ்சந்தையாக தமிழ்நாடு வழி, இந்தியா விளங்கும். அதுபோல, சமய சுற்றுலா வளர்ச்சி தொடங்கி, பெருநிறுவனங்களின் வருகையும் தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும். அது, ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு நன்மையே. ஆனால், அதனை, இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்களின் நண்பர்களாக பெரு முதலாளிகளின் நலனை மட்டும் முன்னிறுத்தி நிகழ்த்தும் போதுதான் அச்சப்பட வேண்டியிருக்கின்றது.

தென் இலங்கையைப் பொறுத்தளவில் எப்போதுமே, தமிழ் நாட்டுக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கும் நிலத்தொடர்பைப் பேணுவதை அச்சுறுத்தலாக உணர்ந்து வந்திருக்கிறது. அது, மகாவம்சம் அவர்களுக்கு வழங்கியிருக்கின்ற தொடர் பயம். அதாவது, இந்தியாவில் இருந்து தென் இலங்கைக்கு தொடர்ச்சியாக படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரலாற்றுப் பயத்தை தமிழ் மக்களுக்கு எதிராகவும் தென் இலங்கை மக்கள் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், இலங்கை இந்திய நிலத்தொடர்பை ஏற்படுத்தும் பாலம் அமைப்புக்கு ரணில் தவிர்ந்த தென் இலங்கை அரசியல்வாதிகளும், பௌத்த அடிப்படைவாத சக்திகளும் இணங்கும் வாய்ப்புக்கள் இல்லை. அதற்காகவே, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்திவிட்டு, நிலத்தொடர்பை ஏற்படுத்துவது, அதாவது பாலம் அமைப்பது தொடர்பில் செயற்திட்டங்களை முன்னெடுக்க இந்தியா முயல்கின்றது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula