தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவரின் கொழும்பு வதிவிடத்துக்கு வருமாறு கட்சி தலைவர்களை அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; பேச்சுக்கு வரவும் இல்லை. குறிப்பாக, சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் கூட பேச்சுக்கு வரவில்லை.
சம்பந்தனின் பேச்சுக்கான அழைப்பை கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற அடிப்படையில் விடுத்த எம்.ஏ.சுமந்திரனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுமே பேச்சுக்கு வந்திருந்தார்கள். அன்றைய தினம் காலையில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடனான கூட்டமைப்பின் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வம் அடைக்கலநாதனும், தர்மலிங்கம் சித்தார்த்தனும் பேச்சுக்கு வரவில்லை. குறிப்பாக, ஐ.நா. பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர், மாலை நடைபெற இருக்கும் கலந்துரையாடல் பற்றி சம்பந்தன் செல்வத்திடம் நேரடியாக கூறி, அவரின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டார். எனினும் சம்பந்தரிடம் நேரில் உறுதியளித்த செல்வம், மாலை பேச்சுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். இதனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்ற விடயம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டது. கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்த் தேசியப் பரப்புக்குள் எழுந்த தமிழ்த் தேசிய முன்னணியோ, சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியோ சம்பந்தனின் அழைப்பை புறக்கணிப்பதிலுள்ள அரசியலை புரிந்து கொள்வது இலகுவானது. ஆனால், ஒரே கூட்டுக்குள் அதுவும் கடந்த காலங்களில் சம்பந்தன் கிழித்த கோட்டைத் தாண்டாத செல்வமும் சித்தார்த்தனும் கூட பேச்சில் கலந்து கொள்ளவில்லை என்பது வாழ்ந்து கெட்டவரின் நிலையை இலகுவாக எடுத்துக்காட்டப் போதுமானது.
கூட்டமைப்பு மீதான அபிமானம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொடுத்தது. கூட்டமைப்பிற்கான விதை தமிழ்க் கட்சிகளினாலும் புலமையாளர்கள் சிலராலும் போடப்பட்டது. ஆனால், கூட்டமைப்பு எனும் விருட்சத்தின் தேவையை புலிகள் உணர்ந்து கொண்டு அவர்கள்தான் வளர்த்தெடுத்தார்கள். அந்த விருட்சத்தின் கீழ் யார் யாரெல்லாம் இணைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் புலிகள் குறிப்பிட்டளவான சுதந்திரத்தை அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதனால்தான், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இராணுவத்தின் ஒட்டுக்குழு போல செயற்பட்ட புளொட் அமைப்பையெல்லாம் அழைத்து பேசும் அளவுக்கான நிலை இருந்தது. ஆனால், புலிகள் ஆளுமை செலுத்தும் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முடியாது, அது இராணுவத்தினருக்கான தங்களின் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கும் என்ற நிலையில் புளொட் அப்போது அதில் அங்கம் வகிக்கவில்லை. மாறாக கூட்டமைப்புக்கு எதிரான நிலையில் நின்று அரசியல் செய்தது.
இவ்வாறான விட்டுக்கொடுப்புக்கள், பழைய பகைகளையெல்லாம் மறந்து நின்றுதான் கூட்டமைப்பை தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக புலிகள் வளர்த்தெடுத்தார்கள். அதுதான், புலிகளின் முடிவுக்குப் பின்னாலும் கூட்டமைப்பு நிலைபெறக் காரணமானது. தமிழ் மக்களின் ஏகநிலைத் தலைவர் போன்று சம்பந்தன் பத்து வருடங்களுக்கு மேலாக செயற்படவும் காரணமானது. முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் புலிகள் அடையாளத்தோடு இருப்பவர்களை கூட்டமைப்புக்குள் இருந்து விலக்க வேண்டும் என்கிற சம்பந்தனது நிலைப்பாடு கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கான அசரீரியை அப்போதே சொல்லியது.
குறிப்பாக, புலிகள் காலத்தில் அவர்களுக்காக இயங்கிய பலரும், குறிப்பாக அரசியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் தொடங்கி அனேகர் முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் புலிகளை ‘மரணத்தின் பேய்கள்’ என்ற தோரணையில் காண்பிக்கத் தலைப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் நெருக்கடியை சந்தித்து வந்த மக்கள், தாங்கள் புலிகளைக் குறித்துச் சொல்லும் அனைத்தையும் ஏற்பார்கள் என்று நம்பினார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை தமிழ் மக்கள் நிறைவேற்றவில்லை. ஏனெனில், புலிகள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. புலிகள் தமிழ் மக்களிடம் இருந்து வந்தவர்கள், அவர்களின் சரிகளையும் பிழைகளையும் ஏற்கும் நிலையில் தமிழ் மக்கள் இருந்தார்கள். அது, புலிகளின் தமிழ் மக்கள் மீதான அர்ப்பணிப்பினாலும் ஏற்பட்டது.
புலிகளின் அர்ப்பணிப்பை மக்கள் மறப்பதற்கு தயாராக இருக்கவில்லை. ஏனெனில், தமிழின விடுதலைக்கான அர்ப்பணிப்பை புலிகளைத் தாண்டி எந்தவொரு தமிழ்த் தரப்பும் இதுவரை செய்தது இல்லை. பல நேரங்களில் இலங்கை அரசினது துணைக்குழுக்கள் போல இயங்கிய தரப்புக்களே அதிகம். அதனால், புலிகள் மீதான மதிப்பீடு என்பது தவிர்க்க முடியாமல் உச்சத்தில் இருந்தது. அப்படியான நிலையில், புலிகள் நிலை நிறுத்திவிட்டுப் போன கூட்டமைப்பை ஏக நிலையில் நின்று ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் வந்தார்கள். அதுதான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போய் முன்னணியை அமைத்த போதிலும், மக்கள் அவரை மிக மோசமாக தோற்கடிக்கக் காரணமானது. ஆனால், கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணையை சம்பந்தனும் அவரது அணியினரும் சரியாக கையாளவில்லை. குறிப்பாக, சம்பந்தன் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி நிலையில் என்று தீர்மானங்களை எடுத்தார். அதற்காக தன்னைச் சுற்றி கேள்வி எழுப்பாதவர்களை வைத்துக் கொண்டார். இன்றைக்கு அதுவே, படுமோசமான நிலைக்கு கூட்டமைப்பை கொண்டு சேர்ப்பதற்கு காரணமாகியிருக்கின்றது.
சம்பந்தன் வயது மூப்பு காரணமாக வலுவிழந்துவிட்டார், கூட்டமைப்புக்குள்ளும் அவரின் பிடி தளர்ந்துவிட்டது. அப்படியான நிலையில், அவர் கடந்த காலங்களில் கூட்டமைப்பையும், ஏனையை தமிழ்த் தேசியக் கட்சிகளையும் கையாண்ட நிலையில் இப்போது கையாள முடியாது போயுள்ளது. அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளைக் கூட பேச்சுக்கு அழைக்க முடியாத நிலை என்பது வீழ்ச்சியின் உச்சமாகும்.
கூட்டமைப்புக்குள் இருக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் புலம்பெயர் பண முதலைகள் கையாளத் தொடங்கி விட்டன. கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களையே ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் அளவுக்கான நிலையை புலம்பெயர் பணமுதலையொன்று ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்த முதலையின் ஊடகம் அதற்காக முழு மூச்சாக இயங்கியது. தற்போது, ஏற்கனவே தலையீடுகளைச் செய்யும் புலம்பெயர் பண முதலையைவிட பெரிய பண முதலையொன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை தன்னுடைய ஏவல் தரப்புகள் மாதிரி கையாளத் தொடங்கியிருக்கின்றது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால் கூட்டமைப்புக்குள் இருக்கும் முக்கியஸ்தர்கள் பதினைந்தும் செய்யக் கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான், கூட்டமைப்பை அழித்துவிட்டு பண முதலைக்கு ஆடும் அரசியல் கூட்டொன்றை அமைப்பது தொடர்பில் நகர்வுகள் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே தமிழரசுக் கட்சி முள்ளில் விழுந்த சேலையின் நிலையில் இருக்கின்றது. அதன் தலைவரே, தமிழரசுக் கட்சியையும் கூட்டமைப்பையும் அழித்தொழிக்கும் வேலைகளில் மிக மும்முரமாக ஈடுபடுகிறார். அப்படியான நிலையில், தமிழரசின் சின்னத்தோடு தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டிய நிலையை மாற்றும் வாய்ப்புக்களை ரெலோவும் புளொட்டும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. அதனால்தான், ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட்டமைப்பினை விபச்சார விடுதி என்று அழைப்பதற்கான நிலை ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பை அதன் பாராளுமன்ற உறுப்பினரே விபச்சார விடுதி என்று அழைப்பதென்பது, கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் மீது காறி உமிழ்வதற்கு ஒப்பானது.
இராணுவத்தோடு கூடிக் குலாவிக் கொண்டிருந்த புளொட்டை புலிகளின் காலத்துக்குப் பின்னர் கூட்டமைப்புக்குள் கொண்டு வந்ததில் சம்பந்தனினதும் மாவையினதும் பங்கு அளப்பரியது. குறிப்பாக, கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்துக்கு வலிகாமத்துக்குள் காணப்பட்ட ஆதரவினை அவரது மகனான சித்தார்த்தனை கூட்டமைப்புக்குள் அழைத்து வருவதன் மூலம் தானும் அறுவடை செய்யலாம் என்று மாவை நினைத்தார். அதனால்தான், போர் வெற்றி குறித்த கோட்டாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கோட்டாவுக்கு அருகில் அமர்ந்த சித்தார்த்தனை மாவை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவராக்கினார். இன்றைக்கு அவர்கள் எல்லோரும் இணைந்துதான் கூட்டமைப்பின் அஸ்திவாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டமைப்பு இன்றைக்கும் தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியாக இருக்கின்றது. அதனை உணர்ந்து அதன் தலைவர்கள் செயற்படாதவிடத்து, புல்லுருவிகளால் தமிழ் மக்களின் ஆணை அடகு வைக்கப்படும். சம்பந்தனும் கூட்டமைப்பு இன்று சந்திக்கும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கான படிப்பினையாக இருக்கும்.