free website hit counter

கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. 

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள், கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றன. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையோடு ஆரம்பித்த கட்டுப்பாடுகள், தற்போது வீடுகளுக்குள் மக்களை முடக்கும் அளவுக்குச் சென்றிருக்கின்றது; கிட்டத்தட்ட ஊரடங்கு போன்றதொரு நிலை.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள் என்பது, அச்சமூட்டும் பெருந்தொற்றுக் காலத்தில் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பாரிய குளறுபடிகளைச் செய்து வருகின்றது. அதனால், மக்கள் இன்னும் இன்னும் பாதிப்புக்குள்ளேயே சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.

மூன்று நாள்கள் தொடர் முடக்கத்துக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை (25) அத்தியாவசிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, மக்களை வெளியில் செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. குறிப்பாக, நடந்து சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு பணித்தது; வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. அதன்மூலம், நடந்து செல்லக் கூடிய, சில நூறு மீற்றர் தூரத்துக்குள் இருக்கும் கடைகளில் மாத்திரம், பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு வலியுறுத்துவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால், இவ்வாறான கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் போன்றவை, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களினதும் தேவைகள், நெருக்கடிகளை உணர்ந்து கொண்டா விதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது.நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கொழும்பைப் பிரதானப்படுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், கொழும்பிலுள்ள மக்களையே பிரதானமாக முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும், அத்தியாவசிய தேவைகள் பற்றிய கரிசனை என்றாலும் கொழும்பில் வாழ்பவர்களைக் குறித்தே அதிக அக்கறை வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால், கொழும்பிலிருந்து பல நூறு கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள், நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வருகின்றது.

நடந்து சென்று பொருட்களை வாங்குங்கள் என்பது, கொழும்பு போன்ற வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள நகரப் பகுதிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால், சில குடும்பங்கள் வாழும் கிராமங்கள், நாட்டில் இன்னமும் உண்டு. அங்கு ஒருசில சின்னக் கடைகளைத் தவிர வாரக் கணக்கில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அவ்வாறான தருணத்தில், தங்களது கிராமங்களில் இருந்து, அடுத்துள்ள நகரப் பகுதிகளை நோக்கி மக்கள் செல்ல வேண்டி ஏற்படும். அந்த நகரப் பகுதி, சிலவேளை 20 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கலாம். இப்படியான கிராமங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கில் உண்டு; தென் இலங்கையிலும் ஆயிரக் கணக்கில் உண்டு. அந்தக் கிராமங்களில் வாழும் மக்கள், தமது அத்தியாவசியத் தேவைகளை, நடத்து செல்லக் கூடிய தூரத்துக்குள் எவ்வாறு நிறைவேற்றுவது?

அத்தியாவசித் தேவைகளுக்காக அடுத்துள்ள நகரப் பகுதிக்கு சென்ற இலட்சக் கணக்கான மக்கள், கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். வங்கிச் சேவைகளை அணுகுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏன், அடகு வைத்து வாழ்வாதாரச் சுமைகளை சமாளிக்கக் கூடியவர்களுக்குக் கூட, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இன்னொரு பக்கம், கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தாலும் அந்தக் கட்டுப்பாடுகள், வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கானது இல்லை என்கிற நிலை பேணப்படுகின்றது. சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட விலை அதிகமுள்ள வாகனங்களில் செல்பவர்கள் பொலிஸாரினாலோ, இராணுவத்தினராலோ நகரப் பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை.

அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல, ஆடம்பரத்துக்குத் தேவையான பொருட்களும், எவ்வளவு தூரத்துக்கு அந்த வாகனங்களில் சென்றும் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுகின்றது. அதுவே, மோட்டார் சைக்கிள்களோ, ஓட்டோக்களிலோ செல்லும் சாதாரண மக்கள், பாதுகாப்புத் தரப்பினரின் பாரிய நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அதிக தருணங்களில், அவர்களிடம் விளக்கம் ஏதும் கேட்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள், வாரக் கணக்கில் தொடரும் அனைத்துத் தருணத்திலும் இரு காட்சிகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒன்று, அடகு நிலையங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே வரிசையில் காத்து நிற்பது. இன்னொன்று, பெரிய வாகனங்கள், அனைத்துப் பல்பொருள் அங்காடிகளையும் மொய்த்திருப்பது. அந்தப் பல்பொருள் அங்காடிகளில் அரிசி, பருப்பு தொடங்கி ஐஸ்கிரீம்கள் வரையில் வழித்துத் துடைக்கப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்டு செல்லப்படுகின்றது. அப்படிக் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள், அதிக தருணங்களில் சில மாதங்களுக்கு போதுமானதாக இருக்கின்றன.

அடகு நிலையங்களில் காத்திருந்து பெற்ற பணத்தைக் கொண்டு, பல்பொருள் அங்காடியை அடைவதற்கே மதியம் தாண்டிவிடும் சூழல்; அங்கு அரிசி, பருப்பு, மரக்கறிகள் என்று உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், சாதாரண மக்கள் அவஸ்தைப்பட வேண்டி வருகின்றது.

யாராக இருந்தாலும், தமது தேவைக்குப் போதுமானதைக் கொள்வனவு செய்து செல்வதுதான், நெருக்கடியான காலகட்டத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டிய மனிதம். அதுதான், மற்றவர்களைக் குறித்துக் கொஞ்சமாவது சிந்திக்கக் கூடிய யாரும் செய்ய வேண்டியது. ஆனால், அவ்வாறான சிந்தனை என்பது, மக்களிடம் பெரியளவில் இல்லை என்பதுதான், இன்னுமின்னும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. பகுத்துண்டு வாழ்தல் என்பது, தன்னிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்வது மாத்திரமல்ல; தனது தேவைகளுக்கு அதிகமானவை, தேவையற்று வீணடிக்காது மற்றவர்கள் பயன்படுத்தும் சூழலைப் பேணுவதுமாகும். ஆனால், அவ்வாறான கட்டத்தைப் பலரும் தாண்டி, நின்று சுயநலத்துக்குள் உழல்கிறார்கள்.

அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, அனைத்துத் தரப்பு மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஒரே நாளில் முழு நாட்டையும் திறந்து சிக்கல்களை உருவாக்காது, பகுதி பகுதியாக ஒவ்வொரு நாளும் திறந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிக்க வேண்டும். அப்படியான கட்டம் தேவையற்ற நெருக்கடிகளைக் குறைக்கும்.

இல்லையென்றால், பொது முடக்கம் பலன்களை விளைவிக்காது. ஏனெனில், தொடர்ச்சியாக மூன்று, நான்கு நாட்கள், வீடுகளுக்குள் முடக்கப்படும் மக்கள், ஐந்தாவது நாளில் கடைகளிலும் சந்தைகளிலும் அதிகமாகத் திரள்கிறார்கள். அப்போது, தொற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

அதனால்தான், ஒவ்வொரு பிரதேசத்தையும் ஒவ்வொரு நாளில் திறந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிப்பது என்பது, நெருக்கடிகளையும் மக்கள் திரட்சியையும் பாரியளவில் கட்டுக்குள் வைத்திருக்கும். இல்லையென்றால், கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் இன்னும் அதிகரித்தே செல்லும். அப்போது, வடக்கு இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழும் நிலை, இலங்கையிலும் உருவாகிவிடலாம். ஓர் அரசாங்கமாக, இவற்றை எல்லாம் குறித்து, சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula