இன்றைய நாளில் பூமியின் ஏதாயினும் ஒரு பாகத்தில் விழக் கூடும் என எதிர்பார்த்த கோஸ்மோஸ் 482 விண்கலம் இன்று காலை ஐரோப்பிய நேரம் 08.24 க்கு இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
1972 ஆம் ஆண்டு வீனஸ் (வெள்ளி) கோளினை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஆய்வுக் கலமான கோஸ்மோஸ் 482, பூமியின் சுற்றுப்பாதையை விட்டு ஒருபோதும் வெளியேற முடியாமல் போனது. அது செயலிழந்த நிலையில் மீண்டும் புவியீர்ப்பு வளிமண்டலத்துக்குள் நுழைந்து குறிப்பிட முடியாத இடமொன்றில் மோதலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அந்த இடத்தினைத் துல்லியமாகத் தெரிவிக்க முடியாதிருந்த நிலையில், கோஸ்மோஸ் 482 இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகில் வரும் போது, ஆபத்தான சூழ்நிலைகளுக்கான அதன் தானியங்கி எச்சரிக்கை அமைப்பால், இந்த இறக்கம் கண்காணிக்கப்பட்டது என்று ரோஸ்கோஸ்மோஸ் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது.அவ்வாறு அது கடலில் வீழ்ந்த இடம், வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தின் மூன்று முக்கிய தீவுகளில் ஒன்றான மத்திய அந்தமான் தீவுக்கு கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிற்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் ஐரோப்பிய நேரப்படி காலை 08.24 மணிக்கு விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.