இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையில் மாற்றம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி, வாகனத் தேவை, எரிபொருள் செலவு, டொலர் கையிருப்பு போன்றவற்றின் தற்போதைய நிலைமை குறித்து விசேட குழு ஆய்வு செய்து வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
எதிர்கால வாகன இறக்குமதி, குறிப்பாக அவசரமாக தேவைப்படும் வாகனங்கள் மற்றும் தற்போதைய தேவை தொடர்பான உண்மைகள் குறித்து குழு கவனம் செலுத்துகிறது, என்றார்.
அண்மையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட 29 வாகனங்கள் தொடர்பிலும் நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு 21 டபுள் வண்டிகளும், கல்வி அமைச்சுக்கு 3 பேருந்துகளும், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு மூன்று வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட 29 வாகனங்களில் 26 வாகனங்கள் வெளிநாட்டு முதலீடுகளைக் கையாளும் திட்டங்களுக்காகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு உதவியைப் பெற்ற பின்னரே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.