ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவரின் பெயரை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்மட்ட உரையாடல்களில் முன்மொழிந்திருக்கிறார். குறிப்பாக, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம், விரிவுரையாளரின் பெயரை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் ஒன்றிணைந்து நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கடந்த ஆண்டு முதன் முதலாக முன்வைத்தது. அந்தத் தருணத்தில், பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தகுதி வாய்ந்த நபர் என்று விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அத்தோடு, தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்காக சில வாரங்களுக்கு முன்னர் அவர் அழைப்பு விடுத்த கூட்டமும் அரசியல் கட்சிகளினால் புறக்கணிக்கப்பட்டது. அதனையடுத்து, வேலன் சாமி என்கிற ஒருவரை பொது வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற யோசனையை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார். அதுவும் யாரினாலும் கணக்கில் எடுக்கப்படவில்லை. இந்த நிராகரிப்புக்களுக்குப் பின்னர்தான்,அவர் இப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளரின் பெயரை முன்மொழிந்திருக்கிறார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் மூன்று முக்கிய தரப்புக்கள் தூக்கிச் சுமக்கின்றன. அதில், முதலாவது தரப்பினர், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைக்கும் நோக்கில் இயங்குபவர்கள். இரண்டாவது தரப்பினர் - 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக தலையில் ஏற்றத் துடிக்கும் குழுவினர். மூன்றாவது தரப்பினர் - தமிழரசுக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையின் விளைவாக 'நீயா நானா' என்ற தன்முனைப்பு (Ego) போட்டிக்காக தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை கையில் எடுத்திருக்கும் சிலர். இந்த மூன்று தரப்பினரும் கூட்டாக நின்று தமிழ் மக்களின் ஒன்றிணைந்த குரலை சர்வதேசத்துக்கு அறிவிப்பதற்கான வாய்ப்பாக ஜனாதிபதித் தேர்தலை பார்க்க வேண்டும் என்கிறார்கள். அதற்காக, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது முக்கிய அரசியல் கருவி என்று விளக்கமளிக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியல் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு தேர்தல்களில் பங்கெடுத்தும், புறக்கணித்தும், அஹிம்சை மற்றும் ஆயுதப் போராட்ட வடிவங்களிலும் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டினை ஒன்றிணைந்து சர்வதேசத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் உணர்த்தப்படாத என்ன மாதிரியான இராஜதந்திர ஒழுங்குள்ள குரலை, தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி இப்போது அறிவிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதுபோக, முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில் கண்ணும் வாயும் மூடி மௌனியாக இருந்த சர்வதேசம், ஒரு இலட்சம் வாக்குகளைக்கூட பெறுவதற்கான வாய்ப்பில்லாத தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை கண்டுகொள்ளும் என்பது என்ன வகையிலான இராஜதந்திர முன்னெடுப்பு. ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்று பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொது வேட்பாளர் முன்னெடுப்புக்களில் ஈடுபட்ட தரப்பினர் காணாமல் போய்விடுவார்கள். பொது வேட்பாளராக போட்டியிட்டவர், குமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம் வரிசையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் என்ற பெயரைப் பெறுவதோடு விடயம் அரங்கில் இருந்து அகன்றுவிடும். இதனைத் தாண்டி அரசியல் இராஜதந்திர வெற்றிகளைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் பொது வேட்பாளர் விடயத்தில் இல்லை.
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ரணிலின் வெற்றிக்காகவும், இந்திய வல்லரசின் பிராந்திய நலன்களுக்காகவும் தூக்கிச் சுமப்பவர்கள் இலகுவில் கைவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. 13ஆவது திருத்தச் சட்டம் என்பது, தமிழ் மக்களிடன் இறக்கி வைக்கப்பட்ட அரைகுறை ஆவணம். அதனைத் தொடர்ந்தும் பாதுகாப்பது என்பது இந்தியாவின் கௌரவப் பிரச்சினையாகும். ஆனால், எப்படியாவது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முறித்து, 13ஆவது திருத்தத்தை செல்லாக்காசாக்கிவிட வேண்டும் என்பது தென் இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. அப்படியான நிலையில், 13ஆவது திருத்தத்தின் பெயரைச் சொல்லி தமிழ் அரசியல் பரப்பினைக் கொண்டு இலங்கையுடனான ஒப்பந்தத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் தொடர் முயற்சியாகும். இப்போது, தமிழ்ப் பொது வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்மொழிந்திருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர்,13ஆவது திருத்தத்தின் வெளிப்படையான ஆதரவாளர். அவர், பொது அரங்குகளில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக கொள்ளப்பட வேண்டியது என்று கூறி வருபவர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு திடீரென சிவில் அமைப்பு என்ற பெயரில் வர்த்தகர் ஒருவர் வழிநடத்தலில் குழுவொன்று தோன்றியது. அந்த அமைப்பில் இருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்துபவர்கள், கடந்த காலங்களில் பல்வேறு சிவில் அமைப்புக்களில் முக்கியஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள். அதிலும், 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் முன்னிறுத்திச் செயற்பட்டவர்கள். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பற்றி இந்தச் சிவில் அமைப்பு பேசிய தருணங்களில் எல்லாம், 13ஆவது திருத்தம் தமிழ் மக்களினால் ஏற்கப்பட வேண்டும் என்ற விடயமும் சேர்த்தே பேசப்படுகின்றது.
வவுனியாவில் கடந்த வாரம், சிவில் அமைப்புக்கள், அரசியல் ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கூடி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். இதன்போது, எப்படியாவது தமிழ் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கில், சில விடயங்களை முன்னிறுத்தி ஊடக அறிவிப்பையும் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே, கிளிநொச்சியில் நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மனோ கணேசன், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை வடக்கு கிழக்கிற்குள் சுருக்கிக் கொள்ளுங்கள், அதனை தெற்கு (தமிழ் மக்களை) நோக்கி எடுத்துவர வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அத்தோடு, விக்னேஸ்வரன், அதே கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்வைத்த கருத்துக்களையும் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தார். அதாவது, கூட்டத்தில் பேசிய விக்னேஸ்வரன், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்கள் முதல் வாக்கினை அளிக்க வேண்டும். இரண்டாவது வாக்கினை தென் இலங்கையின் வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்றிருக்கிறார். இந்தக் கருத்தினையே மனோ கணேசன் கேள்விக்குட்படுத்தினார். இரண்டாவது வாக்கினை சிங்கள வேட்பாளருக்கு அளிக்கலாம் என்பதே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை மலினப்படுத்திவிடுகின்றது இல்லையா என்பது, அவரின் கேள்வி.
ரணிலின் வெற்றி மீது விக்னேஸ்வரனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவு வாக்களிப்பின் போதே, ரணிலுக்கு அவர் வெளிப்படையாக வாக்களித்தவர். தென் இலங்கையினால் முன்னிறுத்தப்படும் ரணில், சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க என்ற வேட்பாளர்களில், ரணிலே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்பதும் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு. அப்படியான நிலையில், ரணிலின் வெற்றிக்காக அவர் பாடுபடுவார் என்பது இயல்பான ஒன்று. ஆனால், அதற்காக அவர், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை கருவியாக்கியிருக்கிறார். இன்றிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஏனெனில், அவர் ராஜபக்ஷக்களின் முகமாகவே இருக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதாக இருந்தால், அது ராஜபக்ஷக்களின் அனுசரணையோடு நிகழ்ந்தாக வேண்டும். அப்படியான நிலையில், தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்போது தமிழ் மக்களின் பெரும்பான்மைத் தெரிவு சஜித்தாகவே இருக்கும். இதனால்தான், சஜித்துக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகளை மடைமாற்றும் முகமாக தமிழ்த் பொது வேட்பாளர் விடயத்தை தமிழ் மக்களிடம் இறக்கி வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் புரிதல் தெளிவானது. அவர்கள், பொது வேட்பாளர் விடயத்தை ஒரு பொருட்டாகவே இதுவரையில் கருதவில்லை. இனியும் கருதுவதற்கு வாய்ப்பும் இல்லை.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொள்ளாமல், தங்களின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்புக்கள், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்தால் அது நிச்சயமாக தோற்றுப் போகும். அப்படியான நிலையில், தமிழ் மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரித்தார்கள் என்ற அவசியமற்ற அவப்பெயரொன்று வரலாறாகிவிடும். ரணிலை வெற்றிபெற வைப்பதற்காகவோ, இந்தியாவின் நலனைக் காப்பதற்காகவோ, ஏற்கனவே பலவீனமடைந்திருக்கிற தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றுவது அறமற்றது.
"...அரசியல் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்திருக்கிற தமிழ் மக்கள், ஜனாதிபதித் தேர்தலை பரீட்சார்த்த முயற்சியாக பார்க்க முடியாது. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் என்பது காலத்துக்கு பொருத்தமற்றது.." என்று ஊடகவியலாளர் ஜெரா தம்பி, தன்னுடைய காணொலி பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சனக்கூட்டம், தன்னுடைய பலத்தைப் இழந்து நிற்கின்ற எந்தவொரு தருணத்திலும், தேவையற்ற பரீட்சார்த்த முயற்சிகளை முன்னெடுக்காது. மாறாக தன்னுடைய பலத்தினை சமூக - பொருளாதார - கல்வி மட்டத்தில் பெருக்கிக் கொள்ளவே முயலும். பலவீனமடைந்திருக்கிற சனக்கூட்டம் தன்னுடைய நிலையை உணராமல், தேவையற்ற பரீட்சார்த்த முயற்சிகளை முன்னெடுப்பது என்பது, மீள முடியாத வீழ்ச்சிகளை சந்திக்கும் சூழலை உருவாக்கும். அத்தோடு, சனக்கூட்டத்துக்குள் தேவையற்ற பிளவுகளை ஏற்படுத்தும். பலவீனமடைந்திருக்கின்ற சனக்கூட்டத்தின் எழுச்சி என்பது, பிளவின்றி ஒருங்கிணைவதன் மூலமே நிகழ முடியும். முள்ளிவாய்க்கால் முடிவுகளைச் சந்தித்து மீண்டுவர முயற்சிக்கும் சனக்கூட்டத்திடம், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் என்பது தேவையற்ற பிளவுகளை ஏற்படுத்தும். சிலவேளை, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டால், கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் அதிகமாக பெறலாம். ஆனால், அது தமிழ் மக்களின் வாக்குப் பிளவை கனதியாக்கும். அது, அடுத்த பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் சூழலைத் தோற்றுவிக்கும்.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்களின் தன்முனைப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விடயமாக கையாளக் கூடாது. அப்படிக் கையாளுதல் என்பது, கட்சியை தமிழ் மக்களிடத்தில் இருந்து இன்னும் இன்னும் அந்நியப்படுத்தும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ராஜபக்ஷக்களின் ரணிலுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். அப்படியான கட்டத்தில் அந்த முடிவின் பக்கத்தில் நிற்பதுதான் சரியானது. மாறாக, மக்களின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று, தனிப்பட்ட கோப தாபங்களைத் தீர்க்கும் விடயமாக ஜனாதிபதித் தேர்தலை கையில் எடுத்தல் என்பது நல்லதல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திற்கான ஆதரவுத் தரப்பாக தமிழரசுக் கட்சிக்குள் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராயும் கூட்டங்களில் இதுவரை பங்கெடுத்தது இல்லை. கிளிநொச்சி மே தினக் கூட்டத்தில் மனோ கணேசனின் தமிழ் வேட்பாளர் தொடர்பிலான பதில், விக்னேஸ்வரனுக்கு மட்டுமானதல்ல, சிறீதரனுக்குமானதுதான்.
ரணிலுக்காக வடக்கு - கிழக்கில் இம்முறை வெளிப்படையாக ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்டவை வாக்குகளைக் கேட்கும். அந்தக் கட்சிகளோடு தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைத் தூக்கிச் சுமக்கும் தரப்பினரும் இணைந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், இரு தரப்பினதும் நோக்கம் ரணிலின் வெற்றியை நோக்கியதுதான். தமிழ் மக்கள் தேர்தல் அரசியலில் சற்று சலிப்படைந்திருக்கின்ற தருணம் இது. அத்தோடு, நாட்டை விட்டு கணிசமான அளவில் வெளியேறி வருகிறார்கள். அப்படியான நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தமிழ் மக்களை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தூர விலக்கி வைத்துவிடலாம். அந்தச் சூழல், அடுத்த பொதுத் தேர்தலிலும் பிரதிபலித்தால் தென் இலங்கைக் கட்சிகளும், அவர்களின் உதிரிகளும் வடக்கு கிழக்கில் வாக்கு வேட்டையை நடத்தும். அதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ, தமிழ்த் தேசியக் கட்சிகள்தான். எதிரியின் பலம் பலவீனத்தை மாத்திரமல்ல, களத்தினையும் சூழலையும் புரிந்து கொண்டு ஆடப்பட வேண்டியது அரசியல் - இராஜதந்திர ஆட்டம். அதில், விளையாட்டுத்தனம் ஆபத்தானது.