2022/2023 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருடாந்த வருமான அறிக்கை நவம்பர் 30, 2023க்கு முன்னர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கூறுகிறது.
குறித்த திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்காமல் வரிக் கோப்புகளைப் பேணுபவர்களுக்கு 50,000 ரூபா அபராதமும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கான வருடாந்த வருமான அறிக்கை மற்றும் சமர்ப்பிப்புகளை நிறைவு செய்வது தொடர்பாக திங்கட்கிழமை (நவம்பர் 27) நடத்தப்பட்ட செயலமர்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வளங்களின் பங்களிப்புடன், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்றக் குழுவின் தலைவர் காமினி வலேபொட தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, வருமான அறிக்கைகளை வழங்குவது மற்றும் அந்த அறிக்கைகளை வழங்கத் தவறியதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக வருமான அறிக்கையை பூர்த்திசெய்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின் போது, அறிக்கையை சமர்ப்பிக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.