அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தடகளப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலா திருநாயகி அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும் பெருமையைப் பெற்றார்.
72 வயதான ஓய்வுபெற்ற சிறை அதிகாரியான திருநாயகி, சிறுவயதிலிருந்தே தனது தடகள திறமையை வெளிப்படுத்தி, நான்கு சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது உடன்பிறந்தவராக உள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு சிறை அதிகாரியாக பணியாற்றிய திருநாயகி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு வீரர்களுக்கான போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், திருமதி அகிலா திருநாயகியின் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். மேலும், ஊக்கமளிக்கும் முகமாக, தடகளத் துறையில் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரித்து, ஜனாதிபதி அவருக்கு பரிசு வவுச்சரை வழங்கினார்.