திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மை தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகங்களில் வெளிவரும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியும் இந்தப் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மக்களின் பொதுப் பிரச்சினைகளை துரிதமாகத் தீர்க்கும் பொறிமுறை அடங்கிய “பதில்” என்ற புதிய இணையப்பக்கத்தை (https://pmd.gov.lk/counter-disinformation-unit/) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆரம்பித்து வைத்தார்.
ஊடகங்களில் அன்றாடம் வெளிவரும் மக்கள் பிரச்சினைகளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில், உரிய அரச அதிகாரிகளிடம் உண்மைத்தன்மையை கேட்டறிந்து, அப்பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண்பது இப்புதிய பிரிவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை கண்டறிந்து உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்புதிய பிரிவின் பணியாகும்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ரங்க கலன்சூரிய, மக்கள் கேட்பதற்கு முன்னரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கமைய அரசாங்கம் தகவல்களை பகிரங்கப்படுத்துமாக இருந்தால், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.