2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் டிபென்டரைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்பு நிற டிஃபென்டர் ஜீப்பில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக முறைப்பாட்டாளர் குற்றஞ்சாட்டியிருந்தார்
2017 ஆம் ஆண்டு, பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரவிற்கு எதிராக சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சதி மற்றும் இளைஞர் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் பிரதிவாதி குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, இந்த தீர்மானத்திற்கு எதிராக பிரதிவாதி மேன்முறையீடு செய்யவுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
இதன்படி சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.