மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல வகையான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
மீள் ஏற்றுமதிக்காக இந்த மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், உள்ளூர் மசாலா விவசாயிகள் ஊக்கமிளப்பதாகவும், அதனால் உள்ளூர் மசாலாப் பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தற்போது உலகின் சிறந்த மசாலாப் பொருட்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் மசாலாப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவும், மீள் ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
உள்ளூர் மசாலாப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கான நீண்ட ஆய்வை மேற்கொள்வது குறித்தும், உள்ளூர் மசாலாப் பொருட்களை தோட்டப் பயிர்களாக மேலும் வளர்ப்பதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.