வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடி இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அமைச்சரவைக்கு சமர்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் வருமான நிலவரத்திற்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
பொது போக்குவரத்து வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், மாற்று வாகனங்கள், பொது வாகனங்கள் மற்றும் பின்னர் தனியார் வாகனங்களில் இருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதிகள் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறைக்காக 1,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அந்த வாகனங்கள் எதுவும் இதுவரை இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் கீழ் 250 பஸ்கள் மற்றும் 750 வேன்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.