மருத்துவர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவு, 35000 ரூபாவால் அண்மையில் அதிகரிக்கப்பட்டது, போதிய நிதியின்மை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
திறைசேரியால் பிரச்சினை தீர்க்கப்படும் வரை 35,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட DAT கொடுப்பனவை 70,000 ரூபாவாக வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நாளை (ஜன. 24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இதனால், அரசாங்கம் DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தியதால், நாளை காலை 08.00 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.
அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை 35,000 ரூபாவிலிருந்து 70,000 ரூபாவாக உயர்த்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை ஜனவரி 08 அன்று அனுமதி வழங்கியது.
அப்போதிருந்து, கதிரியக்கவியல் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவச்சிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலதரப்பட்ட சுகாதாரத் துறை வல்லுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல சந்தர்ப்பங்களில் அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிப்பு கோரி வேலைநிறுத்தங்களை ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.