இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று, ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்று நாடாளவிய ரீதியில் ஹர்த்தால், மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு அரசு மற்றும் அனைத்து தொழிற்சங்ககளும் ஆதரவை வழங்கியுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் ரயில்கள் மற்றும் அனைத்து தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து தனியார் பேருந்துகளும் ஹர்த்தாலில் பங்குபற்றுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழமையாக இயங்கும என போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையும் முற்றாக முடங்கியுள்ளது. கல்வித்துறையின் சகல ஊழியர்களும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் இன்றைய ஹர்த்தால், 69 வருடங்களின் பின்னர் நடைபெறும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதாகவும், நாடளாவிய ரீதியில் 1953 ம் ஆண்டின் பின் நடைபெறும் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் எனும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலில் பங்கேற்குமாறு பொது மக்களை கட்டாயப்படுத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.