இலங்கையில் நிலவிவரும் அரசியற் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை, இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டமொன்றினை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்குவதற்கு உடன்படுவதாகவும் பதுளையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இலங்கையில் பிரபுக்கள் ஆட்சியை நடாத்தும் ராஜபக்ஷக்களின் ஆட்சியை அடியோடு நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.