றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் பலியரிகயதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதாகவும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.
அவர்களில் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாதறிருக்க இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் பெரும் வாக்குவாதத்தினை ஏற்படுத்தியது. ஓட்டோ ஒன்றுக்கு பொலிஸார் தீ மூட்டியதாக ஒருதரப்பினரும், எரிபொருள் பவுசரின் டயர்களின் காற்றை இறக்குவதற்காக ஆயுதங்கள் இருந்ததாக மற்றொரு தரப்பும், குற்றஞ்சாட்டினர்.
இந்த வாக்கு வாதங்களினால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் திருகோணமலையிலும் நேற்று மாலையிலிருந்து ஆரம்பமாகி, இன்றும் தொடர்வதாக அறியவருகின்றது. கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ளதோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாகவும், திருகோணமலை அரச அலுவலகங்களுக்கு காலை, தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை வீட்டினருகே மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியவருகிறது.