ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. ஆயினும் இச் சந்திப்பு மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியுடனான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இக் கலந்துரையாடலில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 அம்ச தீர்மானங்களை முன் வைத்து உரையாடியதாகவும்,
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்தும், புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகவேண்டும் எனக் கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 48 மணித்தியாலங்களை கடந்து தொடர்ந்த வண்ணமுள்ளது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள், காலி முகத்திடல் மைதானத்தில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 11ந்திகதி இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கான விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.