இலங்கை அரசியல் கள நிலவரங்கள் நிமிடத்திற்கு நிமிடம் பரபரபாகிக் கொண்டுள்ளது. தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய கேட்டுள்ளார்.
இதே தொடர்பில் ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் தேசிய நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று ராஜினாமாச் செய்த அமைச்சர்களின் பதவிகளை, பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும், அதன மூலம் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை எனத் தெரிய வருகிறது.
இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் விடுத்துளள அறிவிப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட ஊடககங்களுக்குத் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.
இதேவேளை நேற்று அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று புதிய அமைச்சர்களாகச் சிலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன் பதவியேற்றுள்ளார்கள்.
நிதி அமைச்சர் - அலி சப்ரி
கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய நால்வர் மட்டுமே புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளார்கள்.
இந்நிலையில் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் அரசாங்கத்தை தக்கவைத்துக் கொள்ள முயன்றால், அரசாங்கத்தின் பெரும்பான்மையை இல்லாமல் செய்துவிடுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அரசாங்கத்திற்கு கடும் தொனியில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதேசமயம், நாளை (05) பாராளுமன்றத்தில் 50க்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்பட உள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இன்று ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்தை வீட்டிற்கு செல்லுமாறு மக்கள் கேட்பது மிகவும் நியாயமானது என்றும் இதனைப் புரிந்து கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பங்குச் சுட்டெண்கள் மேலும் சரிவடைந்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
இலங்கையின் நிதிநிலைமை மோசமாகி வரும் நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. சென்ற வாரத்தில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் தீர்மானமிக்க நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தின் முன்னால் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாகவும், இதனால் அப்பகுதியல் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.