இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்காவினால் விளக்கமொன்று அளிக்கப்பட்டுள்ளது.
“மரியாதைக்குரிய ஜனாதிபதி ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானவை. அவர் நாட்டின் நெருக்கடியான நேரத்தில் ஓடிப்போகும் மனிதன் அல்ல” என்றும் ஊடகப் பேச்சாளர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, எதிர்வரும் 23ஆம் திகதியன்று நாட்டின் நிலை குறித்து கலந்துரையாட சர்வக்கட்சி மாநாடு ஒன்றுக்கு ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும், ஜே.வி.பியும் பங்கேற்காது என அறிவித்திருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் இதனைப் பகிஸ்கரிப்பதாக தற்போது அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.