இலங்கையில் வரவிருக்கும் மஹா பருவத்தில் சாகுபடிக்கு யூரியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில வகையான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று வெளியிட்டார்.
ஆனால் இந்த அறிவிப்பு பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியது.
ரசாயன உரங்களின் இறக்குமதியை தடை செய்யும் முந்தைய வர்த்தமானி அறிவிப்பை திருத்தி நிதி அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். ஆனால் ரசாயன உர இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி எடுத்த முடிவை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மாற்றியமைத்தாரா என நேற்று கூடிய பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவுதான் தளர்த்தப்பட்டுள்ந்தாகவும் ஏனெனில் சில துறைகள் உடனடியாக கரிம உரத்திற்கு (இயற்கை உரம்) மாற முடியாது என்று எஸ்எல்பிபி எம்பி குணபால ரத்னசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ரசாயன உரத் தடை இன்னும் அமலில் உள்ளது. பலர் இப்போது கரிம உரத்தைப் பயன்படுத்தத் திரும்பியுள்ளனர், அந்த முன்மொழிவு எந்த தடையும் இல்லாமல் நடக்கிறது. கரிம உரமும் வெற்றிகரமாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆரம்ப கட்டத்தில் சில சிக்கல்கள் இருக்கும், ”என்று ரத்னசேகரன் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை வேளாண் துறை அமைச்சரால் முன்மொழியப்பட்ட கனிம மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தாவர சத்துக்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக வேளாண் விளைபொருட்களுக்கு கரிம உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக 2021 ஏப்ரல் 27 தேதியிட்ட அமைச்சரவை அறிக்கையில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இறக்குமதி செய்ய ஜனாதிபதி தடை விதித்திருந்தார்.