தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்து வந்த விவகாரத்தில் தன்னைக் காத்துக் கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னை பலிகடாவாக்கினார்.” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அந்த நாள் ஜூன் 22, 2004. 
நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். அவரது பெயர் ரணில் விக்ரமசிங்க. எனக்குத் துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்.
கருணா தப்பிச் செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர், தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஜூன் 20ஆம் திகதி அது நடந்தது.
மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து (ரணில் விக்ரமசிங்கவிடம்) அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன. தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மங்கள சமரவீரவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுதத வண்ணமிருந்தனர்.
எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதான பேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார். நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன்.
நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.
நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்.
நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்க வேண்டும். நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன். நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார். நான் அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.
எனக்கு இராணுவப் புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.” என்றுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    