ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றின், குழு B இற்கான இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்துள்ளது.
குழு B இற்கான முதல் போட்டியில், பப்புவா நியூ கினியாவை, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் வெற்றியை ஓமான் பதிவுசெய்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. களத்தடுப்பை தெரிவுசெய்த பங்களாதேஷ் அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்தது.
ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் மெஹிதி ஹாஷன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோரின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறினர். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்கொட்லாந்து அணி, ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
எனினும், ஸ்கொட்லாந்து அணியின் மத்தியவரிசையில் கிரிஸ் கிரீவ்ஸ் மற்றும் மார்க் வட் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்த நிலையில், ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கிரிஸ் கிரீவ்ஸ் 28 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேற, மார்க் வட் 22 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் மன்ஷி 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெஹிதி ஹாஷன் 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹஸன் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஸ்கொட்லாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அனுபவ வீரர்களான முஷ்பிகூர் ரஹீம் மற்றும் சகிப் அல் ஹஸனின் இணைப்பாட்டத்துடன் முன்னேறியது.
இவர்கள் இருவரின் இணைப்பாட்டம் சிறந்த முறையில் கட்டியெழுப்பப்பட்ட போதும், சகிப் அல் ஹஸன் (20 ஓட்டங்கள்) மற்றும் முஷ்பிகூர் ரஹீம் (38 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை, ஸ்கொட்லாந்து அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய கிரிஸ் கிரீவ்ஸ் கைப்பற்றினார். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், பங்களாதேஷ் அணி மீண்டும் வீழ்ச்சியை நோக்கி பயணித்தது. இதில், மொஹமதுல்லாஹ் 23 ஓட்டங்கள், அபிப் ஹொஸைன் 18 ஓட்டங்கள் மற்றும் இறுதி நேரத்தில் மெஹிதி ஹாஸன் 13 ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொடுத்த போதும், பங்களாதேஷ் அணி அணிக்கு வெற்றியிலக்கை அடையமுடியவில்லை.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணி இதற்கு முதல் 2012ம் ஆண்டு ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக ஒரேயொரு T20I போட்டியில் விளையாடியுள்ளதுடன், குறித்த போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே, இது ஸ்கொட்லாந்துக்கு எதிராக பெறும் இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது.
அதேநேரம், சுப்பர் 12 சுற்றுக்கான தகுதிபெறுவதற்கான புள்ளிப்பட்டியலில், B குழுவின் முதலிடத்தை 2 புள்ளிகளுடன் ஓமான் அணி தக்கவைத்துள்ளதுடன், ஸ்கொட்லாந்து அணி அதே 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் பங்களாதேஷ் அணி மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.