22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை.
கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.
கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது.
அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும்.
இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.
தொடக்க நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள 60 அயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் கத்தார் அணி முதல்முறையாக உலக கோப்பையில் கால் பதிக்கிறது. தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஈகுவடார் அணி 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.
தொடக்க லீக் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் 7.30 மணிக்கு பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.