26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலியிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான பி.வி.சிந்து மற்றும் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் சூ யிங்குடன் மோதினார். பேட்மிண்டன் களத்தில் தனது வலுவான எதிராளிகளில் ஒருவரான தாய் சூ யிங்குக்கு எதிராக சிந்து இந்த முறையும் திண்டாடிப்போனார்.
அவரது வேகமான ஷாட்டுகள் மற்றும் வலைக்கு அருகே லாவகமாக தட்டி விடும் பந்துகளை திறம்பட சமாளிப்பதில் தடுமாறிய சிந்து, நிறைய தவறுகளை இழைத்து புள்ளிகளையும் தாரைவார்த்தார்.
42 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 17-21, 13-21 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் காலியிறுதி சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்ட தாய் சூ யிங், முதல்முறையாக இந்த போட்டியில் அரையிறுதியில் கால்பதித்தார்.
தாய் சூ யிங்குக்கு எதிராக இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ள சிந்து அதில் 5-ல் வெற்றியும், 15-ல் தோல்வியும் கண்டுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைக்க தவறிய 26 வயதான சிந்து இந்த ஆண்டில் எந்த சர்வதேச கோப்பையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது