இலங்கையின் முன்னணி கிரிக்கெட் தொடராக கடந்த ஆண்டில் அறிமுகம்
செய்யப்பட்டிருந்த, நெஷனல் சுபர் லீக் (NSL) இம்மாதம் 24ஆம் திகதி முதன்முறையாக ஆரம்பமாகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தொழில்நுட்பக் குழு வழங்கியிருந்த ஆலோசனைக்கு அமைய கடந்த ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு நெஷனல் சுபர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாகவும், நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளாகவும் நடைபெறவுள்ள நெஷனல் சுபர் லீக் தொடரில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களினைச் சேர்ந்த வீரர்கள் 100 பேர் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, தம்புள்ளை மற்றும் காலி என ஐந்து பிரதேசங்களுக்குரிய அணிகளைப் பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் NCC, SSC, CCC, தமிழ் யூனியன் மற்றும் கோல்ட்ஸ் ஆகிய கிரிக்கெட் கழகங்கள் அவை கொண்டிருக்கும் வசதிகளின் அடிப்படையில் தாம் இடம்பெற்றிருக்கின்ற பிரதேச அணிக்குரிய குழுவின் மத்திய நிலையமாக (Center of Excellence) செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நெஷனல் சுபர் லீக் தொடர் ஒருநாள் போட்டிகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அந்த தொடரின் இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.
நெஷனல் சுபர் லீக் ஒருநாள் போட்டிகளாக நடைபெற்ற பின்னர் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.