தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் எல்லா வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 34 வயதான கிறிஸ் மோரிஸ் 2012-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார்.
தென்ஆப்பிரிக்க அணிக்காக 4 டெஸ்ட், 42 ஒரு நாள் மற்றும் 23 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி மொத்தம் 94 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் தென்ஆப்பிரிக்க அணிக்காக பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் அவரது கடைசி கட்ட அதிரடியான பேட்டிங்கும், வேகப்பந்து வீச்சும் ஐ.பி.எல். அணிகளை வெகுவாக கவர்ந்தது.
2020-ம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட அவர், 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தின் போது ரூ.16¼ கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவர் தான். அடுத்து தென்ஆப்பிரிக்காவின் உள்நாட்டு அணியான டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பணியை கவனிக்க உள்ளதாக கூறியுள்ளார்.