சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி வாகை சூடினார். நேற்று நடந்த 14வது சுற்றின் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி, 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற வீரர் என்கிற சாதனையை குகேஷ் படைத்தார்.
முன்னதாக நடைபெற்ற 13 சுற்றுக்களின் கடுமையான போட்டியும், இருவருக்குமிடையில் சமநிலைப் புள்ளிகளும் காணப்பட்ட நிலையில் இறுதி வெற்றி குகேஷுக்கானது.
இது இவ்வாறிருக்க, தமிழகத்தில் வசிக்கும் குகேஷின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவியுள்ளது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “நமது சொந்த தெலுங்கு பையன் 18 வயதில் உலகின் செஸ் சாம்பியனாக சிங்கப்பூரில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். குகேஷ், உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்!” என்று பாராட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இணையத்தில் குகேஷ் தெலுங்கரா தமிழரா எனும் வாதங்கள் தொடங்கியுள்ளன.