வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ஷிகர் தவானும், சுப்மான் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
சிறப்பாக ஆடிய இவர்கள் ஓவருக்கு ஒன்று, இரண்டு பவுண்டரி வீதம் ஓடவிட்டு ஸ்கோரை துரிதமாக உயர்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 14 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.
அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. ஸ்கோர் 119-ஐ எட்டிய போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்த சுப்மான் கில் (64 ரன், 53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) நிகோலஸ் பூரனால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக ஆடினார்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.
பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.
50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தெரிவானார்.