"விஸ்டன்" கவுரவத்தை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார்.
இதன்படி 2023-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர்கள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சருடன் 143 ரன்கள் குவித்ததோடு, 1999-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை இந்தியா வெல்வதற்கு பக்கபலமாக இருந்தார்.
அத்துடன் அவரது தலைமையிலான இந்திய அணி பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. இவற்றை குறிப்பிட்டு அவரை இந்த பட்டியலில் 'விஸ்டன்' சேர்த்துள்ளது. இதன் மூலம் 'விஸ்டன்' கவுரவத்தை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். அவரை தவிர்த்து நியூசிலாந்தின் டாம் பிளன்டெல், டேரில் மிட்செல், இங்கிலாந்தின் பென் போக்ஸ், மேத்யூ போட்ஸ் ஆகியோரும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரரான இந்தியாவின் சூர்யகுமார் யாதவை (31 ஆட்டத்தில் 1,164 ரன்) 2022-ம் ஆண்டின் தலைச்சிறந்த 20 ஓவர் போட்டி வீரராகவும் 'விஸ்டன்' அறிவித்திருக்கிறது.
இதே போல் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்சை உலகின் முன்னணி வீரராக தேர்வு செய்து, அவரது புகைப்படத்தை அட்டை பக்கத்தில் இடம்பெறச் செய்துள்ளது.