6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது. 12-ந் தேதி வரை இந்த ஹாக்கி திருவிழா நடக்கிறது. நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் சென்னை வந்துவிட்டன. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தென் கொரியா-ஜப்பான் (மாலை 4 மணி), பாகிஸ்தான்-மலேசியா (மாலை 6.15 ), இந்தியா-சீனா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் அனைத்து தினங்களிலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது. 9-ந் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. 11-ந் தேதி அரைஇறுதி ஆட்டங்களும், 12-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவுடன் நாளை மோதுகிறது. அதைத் தொடர்ந்து ஜப்பானுடன் 4-ந் தேதியும், மலேசியாவுடன் 6-ந் தேதியும், தென் கொரியாவுடன் 7-ந் தேதியும், பாகிஸ்தானுடன் 9-ந் தேதியும் மோதுகிறது.
ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கூடுதல் பலமாகும். சீனாவில் அடுத்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெறும் அணி பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். தென் கொரியா, பாகிஸ்தான் அணிகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும். 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ரூ.300, 400, 500 விலைகளில் டிக்கெட்டுகள் உள்ளன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.