தமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக அறியவருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் மிகக் கடுமையாக உள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போதுள்ளது.
தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24ம் திகதியுடன் முடியவுள்ள நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது.
இதன் பின்னதாக முதல்வர் அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் ஆலோசனை நடத்தினர். இதன்கோது ஊரடங்கினை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.