கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை எழுச்சி, மற்றும் பரவல் காரணமாக, அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படுகின்றது.
கடந்த மே மாதம் 24ந் திகதி முதல் நடைமுறையில் இருந்த இறுக்கமான ஊரடங்கு உத்தரவு, தற்போது தமிழகத்தின் 38 மாவட்டங்களையும்ஈ பாதிப்பின் அடிப்படையில் 3 பகுதிகளாக பிரித்து, கட்டம் கட்டமான தளர்வுகளுடன் 7 முறைகள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மீண்டும் 12 ந் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வும், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். ஆயினும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பஸ் போக்குவரத்து, நோய் தொற்றுப் பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளுக்கு அமைவாக, குளிர் சாதன வசதி இன்றி, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைமுறைக்கு வந்துள்ளபல்வேறு தளர்வுகளில் இவை குறிப்பிடத்தக்கன.