காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர்.
அப்போது 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி? என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாகவும் தமிழ்நாட்டிற்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் சுப்ரீம் கோர்ட் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள் காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.