free website hit counter

மெஸ்சி ரசிகர் சந்திப்பில் கலவரம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட் லேக் மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெஸ்சி சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மெஸ்சி மீண்டும் மைதானத்துக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வராததால், ஆத்திரமடைந்த அவர்கள் மைதானத்துக்குள் புகுந்து டெண்டுகளை சூறையாடினர். ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் கூறும்போது, "மிகவும் மோசமான நிகழ்வு. மெஸ்சி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். தலைவர்களும், மந்திரிகளும் அவரை சூழ்ந்திருந்தனர். எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் பணம் மற்றும் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மற்றொரு ரசிகர் கூறும்போது, "தலைவர்களும், நடிகர்களும் மட்டுமே மெஸ்சியைச் சுற்றி இருந்தார்கள். பிறகு ஏன் எங்களை அழைத்தார்கள். 12 ஆயிரத்துக்கு டிக்கெட் வாங்கினோம், ஆனால் நாங்கள் அவரது முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

பெண் ரசிகை ஒருவர், "நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம். என் குழந்தை மெஸ்சியைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. இது ஒரு மோசடி என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு, மெஸ்சி பிற்பகலில் ஐதராபாத்துக்கு செல்கிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் மெஸ்சி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula