பிரதமர் மோடி கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கானா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குச் சென்று இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தார்.
அப்போது, அவருக்கு இரு நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர், அவர் அர்ஜென்டினாவுக்குப் புறப்பட்டார். பாரம்பரிய வழக்கப்படி, நாட்டில் உள்ள எஸீசா சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
57 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவர் வந்ததையொட்டி, இந்திய சமூகம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது.
இந்தப் பயணத்திற்குப் பிறகு, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று காலை பிரேசில் புறப்பட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “நான் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை அடைந்துவிட்டேன். இதன் பிறகு, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பேன். பிரேசில் அதிபர் லூலாவின் அழைப்பின் பேரில், நான் பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவுக்குச் செல்கிறேன்.
இந்தப் பயணத்தின் போது ஆக்கபூர்வமான விவாதங்கள் மற்றும் சந்திப்புகளை எதிர்நோக்குகிறேன்” என்று அவர் கூறினார். பிரேசில் பயணம் முடிவடைந்து, இறுதியாக அவர் நமீபியாவுக்குப் பயணம் மேற்கொள்வார்.