சென்னை: இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல். இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் 22ம் திகதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் மதிப்பெண் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுருக்கவில்லை.
அதாவது, மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத் துறையும் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. அவைகளை இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம் அந்த மதிப்பெண்கள் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அதற்கான இணையதள முகவரியும் நேற்று முன் தினம் அரசு தேர்வுத்துறை வெளியிட்டிருந்தது. வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டுதான் வழங்கப்படும். ஆனால் இந்த முறை அப்படி கிடையாது. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மார்க் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறையான தசம எண் அடிப்படையில் வரும் மதிப்பெண்களை, வெட்டுபுள்ளி(Cut-Off)மதிப்பெண்ணாக கணக்கிடும்போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படையமாட்டார்கள். ஒருகுழப்பமும் இல்லாமல் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அடித்தளமாக இருக்கும் என்று கல்வித்துறை நம்புகிறது.
பிளஸ் 2 மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 22ம் தேதி முதல் www.dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பீட்டு தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.