முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என, பிரபல நடிகர் பிரித்விராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக - கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி. 15.5 டி.எம்.சி., தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை விவகாரத்தில், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால் கேரள மாநில அரசு இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை, மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். இடுக்கி உட்பட 5 மாவட்டங்கள் முழுவதும் அழிந்து விடும் என, கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கி விட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.