பிரதமர் மோடி தொடர்ச்சியாக 12 சுதந்திர தின உரைகளை நிகழ்த்தி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
பிரதமர் மோடி தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி 12வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் விவசாயிகள் நலன் குறித்து அவர் இன்று பேசினார். அவர் இன்று மொத்தம் 103 நிமிடங்கள் பேசினார். இது பிரதமர் மோடியின் மிக நீண்ட உரையாகும். 2014 ஆம் ஆண்டில் மோடி 98 நிமிடங்களும், 2016 ஆம் ஆண்டில் 96 நிமிடங்களும் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலம், பிரதமர் மோடி தனது சாதனையை முறியடித்துள்ளார்.
தொடர்ச்சியாக 12 சுதந்திர தின உரைகளை நிகழ்த்தி இந்திரா காந்தியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் 11 சுதந்திர தின உரைகளை நிகழ்த்தினார்.
இந்தியாவில் அதிக முறை, 17 முறை, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சாதனையை ஜவஹர்லால் நேரு வைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல் சுதந்திர தினத்தன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீடித்த உரையை நிகழ்த்தினார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு 88 நிமிடங்கள் நீடித்த உரையை நிகழ்த்தி நேருவின் சாதனையை முறியடித்தார்.