உலகளவில் அதிக ஊழியர்களை கொண்ட துறையாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில், இந்தாண்டு நிலவரப்படி மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.ராணுவ வீரர்கள், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் என, அனைத்து பிரிவு ஊழியர்களும் இதில் அடங்குவார்கள்.
29 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்தாண்டு 2வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சீன ராணுவம் 25 லட்சம் ஊழியர்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் வரிசையில், உலகில் வால்மார்ட்டை விட வேறு எந்த நிறுவனத்திலும் அதிக ஊழியர்கள் இல்லை. வால்மார்ட் நிறுவனத்தில் 23 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, அமேசான் நிறுவனத்தில் 16 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
உலகளவில் ராணுவத் துறைக்கு ஒதுக்கப்படும் செலவு தொகை 2.113 லட்சம் கோடி(2113 பில்லியன்) அமெரிக்க டாலர்களை 2021ஆம் ஆண்டில் எட்டியது.
உலகளவில் ராணுவத் துறைக்கு அதிகமாக செலவழிக்கும் நாடுகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. 3ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ரஷியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.