உத்தரகாண்டின் உத்தர்காஷியில் சில்க்யாராவில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையில், கடந்த நவம்பர் 12ந் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்குண்ட, 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தன.சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் பல ஏஜென்சிகளுடன் இணைந்து நடைபெற்ற மீட்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக, கிடைமட்ட துளையிடுதலை மேற்கொள்ள இந்திய ராணுவமும் அழைக்கப்பட்டிருந்தது.
சுரங்கத்தின் உள்ளே சிக்கித் தவித்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டதும், அவர்களுக்கு குழாய்களின் வழி, உணவு, பழங்கள், மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது.
சுரங்கப்பாதையில் 60 மீட்டர் நீளமுள்ள இடிபாடுகளை மீட்புக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக உடைத்து 16 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தினை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள், முதலுதவிப்பிரிவினர் அடங்கிய குழுவும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன. மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட மேலும் பல அரசியற் பிரமுகர்களும், தொழிலாளர்களது உறவினர்களும், சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.
இயந்திரங்களால் துளைக்க முடியாது போன இடிபாடுகளை நம்பிக்கையுடனும் முயற்சியுடனும் தமது கைகளால் தோண்டிய இறுதி நடவடிக்கையில், நீண்ட போராட்டத்தின் பின்னதாக, தேசிய பேரிடர் மீட்புக்குழு, இரானுவ மீட்புக் குழு, மருத்துவர்கள் அனைவரது கூட்டு முயற்சியில் தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.வெளியே வந்த அனைத்துத் தொழிலாளர்களையும் அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் கட்டியணைத்து, மாலை அணிவித்து வரவேற்றனர். 41 தொழிலாளர்கள் மீட்பு - குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி