இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை நாட்டின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலேயே உள்ளது.
அங்குள்ள சில பகுதிகளில் தொற்று அதிகரித்தும் உள்ளது. இத்தகைய பகுதிகளில், தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு கவனம் கொள்கிறது.
இது தொடர்பில், வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் இந்த ஆலோசனை மாநாட்டில், தொற்றை தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறியவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவதற்கான வழிகளை ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் இந்த ஆலோசனைக் கூட்டத்தினை நடத்துகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.