ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹோலி பண்டிகை தினமான இன்று சென்னையில் ஹோலி கொண்டாட்டங்கள் உற்சாகமாக களை கட்டி காணப்பட்டது. வட மாநிலத்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று திரண்டனர். அப்போது கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது தங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் வீட்டுக்கு அழைத்திருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக முதலில் முகத்தில் லேசாக வண்ணப்பொடிகளை பூசினர். பின்னர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது. வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டங்கள் ஆட்டம்-பாட்டத்துடன் களை கட்டி இருந்தது.
‘ஹோலிகா’ என்கிற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டும் வகையிலும், கோடைக்காலத்தை வரவேற்கும் விதத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாகவும் கருத்து நிலவுகிறது. ஹோலி கொண்டாட்டம் காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகள் இன்று வண்ண மயமாக காட்சி அளித்தன.