எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில், சென்னை வடபழனியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர் அண்ணா நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதினார்.
அவர், தேர்வு மையத்திற்குள் நுழைந்ததும், போலீசார் மற்றும் சோதனை அதிகாரிகள் அவரை பெற்றோர் என்று நினைத்துள்ளனர். பின்னர், ஒன்றுக்கு இரண்டுமுறை அவரது ஹால் டிக்கெட்டை சோதனை செய்த பின்னர் அவரை தேர்வு எழுத அனுமதித்தனர்.
இதுதொடர்பாக ஜிம் உரிமையாளர் மோகன் கூறும்போது, எனக்கு தெரிந்த கேள்விகள் வரவேண்டும் என்ற பதட்டத்தில் நான் இருந்தேன். நான் தேர்வறைக்குள் சென்றதும், என்னை மாணவர்கள் புதிதாக பார்த்தனர். எனினும், நான் தேர்வு எழுதுவதில் மட்டும் முழு கவனம் செலுத்தினேன் என்றார்.
மோகன், அவரது 12ம் வகுப்பை 30ஆண்டுகளுக்கு முன் முடித்த போது மருத்துவ படிப்பில் சேர முயன்றுள்ளார். எனினும், அது நிறைவேறவில்லை. இதனிடையே, கடந்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனது சகோதரி மகளுக்கு உதவிய போது, மோகனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நீட் எழுத வயது தடையல்ல என்பதை அறிந்த மோகன், நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார்.
மோகனின், இந்த முடிவுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் அவரது மகளும், மகனும் உறுதுணையாக இருந்தனர் என்றார்.