சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் 95.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயரலாம் எனத் தகவல் பரவியது.இருப்பினும், இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.
'அரசுப் போக்குவரத்துத் துறையில் 7000 பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பணியாளர்களைச் சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும். கொரோனாவுக்கு முன்பு அரசு பேருந்துகளில் 1.60 கோடி பேர் பயணித்த நிலையில், இப்போது அது 90 லட்சம் ஆகக் குறைந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அதேநேரம் இது குறித்து காலப்போக்கில் அப்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.
டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மின்சார (எலக்ட்ரிக்) பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல புதிதாக 2,000 புதிய டீசல் பேருந்துகள் வாங்கத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.