தமிழக காவல்துறையில் 1997ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கோவை பெண் காவலர்கள், காவல் துறையில் 25-வது ஆண்டில்
அடியெடுத்து வைப்பதை நடனமாடி , கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக காவல்துறையில் கோவை மாவட்டத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு பெண்கள் காவல் பணிக்குச் சேர்க்க்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் இணைந்து "சங்கமம் கோவை நண்பர்கள்" என்ற பெயரில் 24 ஆண்டுகள் காவல் பணி நிறைவடைந்து 25 வது ஆண்டு துவக்கத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒன்று சேர்ந்த பெண் காவலர்கள் 78 பேர் ஒரே மாதிரியான சேலை உடுத்தி உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இருபத்தி ஐந்தாவது ஆண்டு துவக்கத்தை கேக் வெட்டி வெள்ளி விழாவாக கொண்டாடிய பெண் காவலர்கள், சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
காவல் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பெண் காவலர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இருபத்தி நான்கு ஆண்டுகளாக காவலர் பொறுப்பில் இருந்த இந்த 78 பெண் காவலர்களும் விரைவில் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.