டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை கேட்டதும் மாரியப்பன் மகிழ்ச்சி அடைந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்று அபாரமாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாரியப்பன் தங்கவேலு நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
இதனை தொடர்ந்து மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. முதலமைச்சர் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அரசு வேலை வழங்குமாறு, முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அரசு பணி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப்பதக்கம் கிடைத்ததில், சிறிது வருத்தம் அளிக்கிறது. அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்." இவ்வாறு அவர் கூறினார்